இலங்கைக் கபடி அணியில் தற்போது ஒரே ஒரு தமிழ் யுவதி இடம் பிடித்துள்ளார். மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி (வயது 19) இலங்கை தேசிய கபடி அணிக்கு தெரிவாகியுள்ளார்.
கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர் 12 பேர் கொண்ட அணியில் 11 சிங்கள பெண்கள் மத்தியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ் யுவதியாகும்.
இவர் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் ஈரான் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கபடி போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணி சார்பில் பயணமாகவுள்ளார்.
இந்த மாணவியை வாழ்த்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் புதன்கிழமை கஜேந்தினியின் இல்லம் சென்று உற்சாகமூட்டியதோடு சிறு நிதியுதவியையும் மாணவிக்கு வழங்கி வைத்தார்.
வறுமைப்பட்ட குடும்பப் பின்னணியிலும் போரால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் குறித்த மாணவி இந்த அடைவைப் பெற்றுள்ளது முன்னேற்றத்துக்கான முன்னுதாரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
தனது வறுமையின் மத்தியிலும் தான் இந்த வெற்றியைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், கிரான் ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கும், அதன் பயிற்றுவிப்பாளருக்கும் கஜேந்தினி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment