அண்மையில் இடம்பெற்ற மின் துண்டிப்புகள் பல வினாக்களை எம் மனதில் ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது. மின் துண்டிப்பானது நடைமுறை அரசின் கவனக்குறைவினால் ஏற்பட்டதா..? அல்லது இவ்வரசின் முகாமைத்துவத்தின் திறனை கேள்விக்குட்படுத்தும் வகையில், எவராலும் நாசகார வேலைகள் செய்யப்படுள்ளனவா..?
என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் வினா எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் வியாழக் கிழமை (07) இடம்பெற்ற ‘மின் துண்டிப்பு’ பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய அவர்.
நல்லாட்சியின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் சரியானவற்றை வரவேற்கவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. அரசாங்கம் மின் வழங்கல் விடயத்தில் எப்போதும் முன் கூட்டிய திட்டமிடல்களைத் திறன்பட மேற்கொள்ள வேண்டும். அதாவது மக்களின் அதிகரித்துவரும் மின் பாவனைகளும் அவற்றுக்கு ஈடாக உற்பத்தி செய்யக் கூடிய மின்சாரத்தின் அளவுகளையும் அதிகரித்துச் செல்ல வேண்டும். அத்தோடு மின்சாதனங்களின் பாவனைக்காலம், உப மின் நிலையங்களின் பாதுகாப்புகள் தொடர்பில் இவ்வரசாங்கமும், மின்சக்தி அமைச்சும் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். மேலும் மின்சாரத்துக்கான தட்டுப்பாடுகள்,அல்லது தடைகள் எற்படுமிடத்து அவற்றுக்குப் பதிலீடாக என்ன செய்ய வேண்டும், என்பதற்கான பதிலை முன் கூட்டியே தயார்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாகவும் அவர்கள் இருக்கவேண்டும்.
குப்பிவிளக்கு கலாசாரத்துக்குப் பழக்கப்பட்ட நாம் அதிலிருந்து மின்சார கலாசாரத்துக்கு வந்திருக்கின்றோம். இத்தகைய மின் பாவனைக்குப் பழக்கப்பட்ட மக்களை திடீர் என்று பின்னோக்கி இருள் நிலைக்கு தள்ளுவதென்பது மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. வேட்டை யுகத்திலிருந்து விவசாய யுகத்துக்குள் வந்து கைத்தொழில் யுகம், தகவல் தொழிநுட்ப யுகத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே மின்சாரமில்லாமல் எவையும் இயங்க முடியாது, எவற்றையும் இயக்கவும் முடியாது என்கின்ற நிலையில் 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக நீண்ட நேர மின் தூண்டிப்பாக பதிவுசெய்யப்பட்ட அண்மைய மின் துண்டிப்பு மக்களை முடக்கிவிட்டுள்ளது.
இதுவரை காலமும் நாம் நீர் மூலமான மின் பாவனையையே நம்பி இருக்கிறோம் ஆனால் இது இனிவரும் காலங்களிலும் சாத்தியமாகுமா.? என்பது ஐயமே. தரவுகளின்படி 2011ஆம் ஆண்டில் 3,972,672 Gwh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்த எம்மால், 2013ஆம் ஆண்டில் வெறும் 6,10,099 Gwh மின்சாரத்தையே உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. காரணம் காலநிலை மாற்றங்களால் நீர் உற்பத்தி வளங்கள் சிதைவடைந்துள்ளமையே ஆகும். எனவே நீர் மின்சார உற்பத்திக்குப் பதிலீடாக வேறு ஒரு முறைமையைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அனல் மின் உற்பத்திக்கு அண்மைக் காலங்களில் ஊடகங்கள் வாயிலாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. நுரைச்சோலையை சான்று பகர்ந்து சம்பூர் அனல் மின்னிலயத்தை அமைக்க வேண்டாம் என்ற கோசங்களும் எழுந்துள்ளன. ஆகவே எந்த ஒரு உற்பத்தியினையும் மேற்கொள்கின்ற போது அதில் உள்ள சாதகங்களை மட்டும் பாராது பாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment