மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் அவர்கள், அன்மையில் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வடமுனை, ஊத்துச்சேனை கிராமங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
எல்லை கிராமத்தில் வசிக்கும் தாம் அபிவிருத்தி விடயங்களில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், தமது பிள்ளைகளின் கல்வி வசதிகளைக்கூட பூரணமாக நிவர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் விசனம் தெரிவித்தனர்.
வடமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பல காலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. தரம் ஒன்பது வரையுள்ள இப்பாடசாலையில் வெறும் நான்கு ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர். அத்துடன் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் சில நாட்களிலேயே இடமாற்றம் பெற்றுச்செல்கின்றனர் என விசனம் தெரிவித்தனர்.
வீதியால் பயணிக்கும் போது யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகுவதாகவும், வீதியை அண்மித்த பகுதிகளில் உள்ள காடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர். அத்துடன் ஊத்துச்சேனைக்குச் செல்லும் பிரதான விவசாய வீதியைப் புனரமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். பலகாலமாக தாம் குடிநீர் பிரச்சனைகளையும் எதிர் நோக்குவதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர்.
பாடசாலைக்கான ஆசிரியர்களை நியமிக்கும் வரை தற்காலிகமாக தொண்டர் ஆசிரியர் அடிப்படையில் இதே கிராமத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களையே நியமித்துத் தருவதாகவும், அவர்களுக்கான கொடுப்பனவுகளை தாமே வளங்குவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இக்கிராமங்களுக்குச் செல்லும் பாதையை அண்மித்த காடுகளையும் அகற்றித்தருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு குடிநீர் வினியோகத்துக்காக தற்போது உன்னிச்சையில் அமைக்கப்படுள்ளது போல் ஒரு package plant முறைமையை அமைப்பது தொடர்பில் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடி வெகு விரைவில் தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
0 Comments:
Post a Comment