தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நாம் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை நிருவாகத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னரே வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த இந்த மாகாணம் வெளிச்சத்திற்கு வந்தது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான என். திரவியம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் நிலைமை தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
வெளியுலகத்திற்குத் தெரியாமல் இருந்த கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளை ஏனைய அபிவிருத்தி கண்ட பிரதேசங்களோடு இணைப்பதிலும் அங்குள்ள மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் அடையாளம் கண்டு அதனை ஓரளவேனும் நிறைவு செய்து கொடுப்பதிலும் சந்திரகாந்தன் தலைமையிலான அப்போதைய மாகாண சபை நிருவாகம் அயராது பாடுபட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னரே கவனிப்பாரற்றுக் கிடந்த வாகரை பிரதேசம் தொடங்கி அரசியல்வாதிகளின் கால்கள் மிதிபடாத ஏனைய காட்டுப் புறக் கிராமங்கள் வரை அபிவிருத்தி கண்டது.
இருளில் கிடந்த மக்களுக்கு நாம் மின்சாரத்தையும் வழங்கினோம்.
சந்திரகாந்தன் மிகவும் திட்டமிட்ட வகையில் அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தார். மக்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவைகளுக்குத்தான் நாம் முக்கியத்துவமளித்தோம்.
2008ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிட முடியாமல் அஞ்சி நடுங்கி உயிருக்குப் பயந்து எங்கோ ஓடிப்போய் ஒழிந்திருந்த அரசியல்வாதிகள் எல்லாம் நாம் அரசியலுக்கு வந்து மாகாண சபை நிருவாகத்தை நடத்திக் காட்டியதன் பின்னர்தான் களமிறங்கினார்கள்.
2008 இற்குப் பிறகுதான் இவர்களுக்கு உயிர் மூச்சே வந்தது.
கடந்த கால ஆயுதப் போராட்டத்தின் விளைவாக நலிவடைந்து அனைத்தையும் இழந்திருந்த கிராமப்புற மக்கள் நாம் எடுத்துக் கொண்ட அயராத அக்கறையின் காரணமாக குறைந்த பட்சம் சீரான பாதையிலாவது பயணம் செய்ய முடிந்தது.
வளங்கள் நிறைந்த இந்தக் கிழக்கு மாகாணத்திற்கென்று ஒரு தனித்துவம் உண்டு.
இதனைக் கொண்டு இந்த மாகாணத்தை மக்களின் பங்களிப்போடு இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் மின்சாரம் இல்லாத பகுதிகளாகவும் அபிவிருத்தியைக் காணாத பிரதேசங்களாகவும் வெளிச்சத்துக்கு வராமலே இருந்து வந்த பல இடங்கள் மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அபிவிருத்தியைக் கண்டன.
இப்பொழுது மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். ஆனாலும், இவர்களுக்கு ஆளுமை இல்லாததன் காரணமாக மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைந்துள்ளன.
மக்களின் தேவைகள் என்ன என்பது தொடர்பில் அவர்கள் சிந்திப்பதில்லை.
தேர்தல் காலங்களில் கூட்டம் கூட்டமாக வந்து உணர்ச்சியூட்டும் உரிமைக் கோஷத்தை எழுப்பி வாக்குகளைச் சூறையாடி விட்டு மறைந்து விடுகிறார்கள்.
தொலைதூரக் கிராமங்களில் பல்வேறு சிரமங்களோடு வாழும் மக்களைப் பற்றிச் சிந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண அமைச்சர்களுக்கோ உறுப்பினர்களுக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ நேரமில்லை.
அதனால், மக்களின் நிலைமை கவனிப்பாரின்றி கைவிடப்பட்டுள்ளது.
இது பற்றி இனி வரும் காலங்களில் யார் தங்களுக்குச் சேவை செய்வார்கள் என்று மக்கள் அடையாளம் காண வேண்டும். மக்களையும் நாட்டையும் சீரழிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் ஓரங்கட்ட வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment