22 Mar 2016

சிறுமிக்குச் சித்திரவதை - தந்தைக்கும் அவரின் இரண்டாவது மனைவிக்கும் பிணை வழங்க வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மார்ச் 28
ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தையையும் தந்தையின் இரண்டாவது மனைவியையும் பிணையில் விடுவிக்க வேண்டாம் எனக்கோரி மட்டக்களப்பு நீதிமன்றின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று திங்களன்று 21.03.2016 முன்னெடுக்கப்பட்டது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரால் ஏற்பாடு  செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர் உரிமை ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இப்படிப்பட்ட அநியாயங்களைப் புரிகின்றவர்களுக்கு பிணை வழங்கும்போது அவர்கள் சமூகத்தில் தங்களை குற்றமற்றவர்களாகக் காட்டிக் கொண்டு கௌரவத்துடன் நடமாட வழியுள்ளதால் குற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனைத் தடுக்கும் முகமாக இப்படியான சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதி விசாரணை முடியும் வரை பிணை வழங்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரி நின்றனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவளது தந்தையின் இரண்டாந் தாரமான பெண்   நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், சிறுமியின் உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 11.03.2016 தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவியிடமும் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியையும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடிப் பொலிஸார் மேற்படி இருவரையும் ஞாயிறன்று 13.03.2016 கைது செய்திருந்தனர்.

சித்திரவதைக்குள்ளானதாகக் கூறப்பட்டுள்ள சிறுமியின் தாய் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். 

இதன் பின்னர், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்த நிலையில் முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் தந்தையின் இரண்டாவது மனைவியிடமே இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 14.03.2016 அன்று நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்ட சந்தேக நபர்களை மார்ச் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா   சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அங்கு சட்ட வைத்திய நிபுணரின் ஆலோசனையின் பேரிலும்  அவரின் கண்காணிப்பிலும்  சிகிச்சை அளிக்குமாறும் நீதிவான் பணித்தார்.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: