இலங்கையில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே செய்பட்டுள்ளன. அந்த வகையில் அபிவிருத்தியின் செயற்பாடுகளை மேலோங்கச் செய்வதற்கு மக்களின் ஆதரவுகள் இன்றியமையாததாகும், அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களிலிருந்து தற்போது வரை அரசியலூடாக மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் அரசியல்வாதியினுடனான நேர்காணல்.
கடந்த 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசியல் யாப்பிற்கு அமைவாக பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு, மாவட்டத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியினை சந்தித்த போதிலும் அப்போது, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு குறுகிய காலத்தினுள் மட்டக்களப்பு மாவட்டத்தில், பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர் என்ற வகையில் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் வரவேற்பினை பெற்றிருக்கின்றீர்கள் இது இவ்வாறு இருக்க….
கேள்வி : - நீங்கள் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பாக கடந்த 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியினை சந்தித்த போதிலும் அன்றைய அரசாங்கத்தினால் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு எவ்வாறான வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்தீர்கள்.
பதில் : - அப்போது எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையால் தேர்தலில் தோல்வியினைச் சந்தித் போதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்களினால் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்று பல்வேறு பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தேன்.
அந்த வகையில் பல அதிகாரங்கள் எனக்கு அப்போது, வழங்கப்பட்டன. அதன் காரணமாக மாவட்ட இணைப்பாளர், மாத்திரமல்லாது புனர்வாழ்வு அமைச்சின் மாவட்ட இணைப்பாளராக, பிரதி அமைச்சராக வருவதற்கு முன்னரே நியமிக்கப்பட்டேன். அதன் மூலமாக தெளிவாக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் என்னால் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்தக் கூடிய நிலை உருவாகியது காரணம். பல்கலைக் கழக மட்டத்தில் மிகவும் மோசமான நிலைமை காணப்பட்டன. குறிப்பாக நிருவாக ரீதியான ஒழுங்கமைப்பினை மேற்கொள்ளும் நோக்கில் பேராசிரியர் இராஜேந்திரன் அவர்களை உப வேந்தராக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டதுடன், அவர் ஊடாக பல்கலைக் கழகத்தின் கட்டிட வசதிகள் தொடர்பான அறிக்கையினைப் பெற்று மகளிர் விடுதி மற்றும் தாவரவியல், இரசாயனவியல், தொடர்பான பீடங்களுக்கான கட்டிட வசதியினை ஏற்படுத்தியது மட்டுமல்லாது,
அப்போதைய காலகட்டத்தில், மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி மூலமாக பட்ட முதுமாணி வழங்கக் கூடிய வகையில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகாரம் வழங்கப்பட வில்லை இதனால் நான்கு வருடங்கள் தமது கற்கை நெறியினை மாணவர்கள் பூர்த்தி செய்த நிலையிலும் ஆசிரியர் நியமனங்களைப் பெறுவதில் பாரிய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையில் அப்போதைய உயர்கல்வி அமைச்சராக இருந்த லக்மன் கிரியல்ல அவர்களுடன் கலந்துரையாடி நிலையிலும் தீர்வு கிடைக்கப் பெறவில்லை காரணம் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவிற்கு குறித்த விடயம் எம்மைப் பொறுத்த மட்டில் பெரிய விடயமாகத் தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்த வகையில் பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளாத போதிலும் தொடர்ச்சியான அழுத்தத்தினால் அமைச்சர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தார்.
கேள்வி : - நீங்கள் பிரதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் திருகோணமலை வளாகத்தினை கிழக்கு பல்கலைக் கழகத்துடன் இணைப்பதா றுகுணுப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதா என்று முரண்பாடுகள் ஏற்பட்டன இதனை நீங்கள் பிரதி அமைச்சர் என்ற வகையில் எவ்வாறு எதிர் கொண்டீர்கள்.
பதில் : - அக்கால கட்டத்தில் அரசாங்கத்தினால் முழு அதிகாரங்களும் எனக்கு வழங்கப்பட்டன இதன் காரணமாக உயர் கல்வி அமைச்சுடன் பேசி தீர்வினைப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டன. அத்துடன் பேராசிரியர் மகேந்திரன், பேராசிரியர் வரகுணம் ஆகியோர் மூலமாக அறிக்கையினைப் பெற்று பல்கலைக் கழக விடயம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டன.
இதற்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் மூக்கையா மற்றும் முன்னர் பல்கலைக் கழகத்தின் உபவேந்தராக இருந்த இராஜேந்திரன் தனது பதவிக்காலம் முடிந்த நிலையிலும் பாரிய பங்களிப்புச் செய்தனர். இதன் பின்னர் எனது வேண்டுகோளின் பேரில் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உயர் கல்வி அமைச்சர் இந்திக்க குணவர்த்தன தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றன.
இதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலகரெத்தின உட்பட உபவேந்தர்கள் பீடாதிபதிகள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கலந்துலையாடலை மேற்கொண்டு பட்டியல் இடப்பட்ட பல பிரச்சினைகளுக்கு ஒரே தினத்தில் தீர்வு காணப்பட்ட போதிலும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் உருவாக்குவதற்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் இணக்கம் தெரிவிக்கப் படவில்லை காரணம் யாழ்பாணத்தில் மருத்துவ பீடம் உள்ளது.
என்ற ஒரே காரணத்தினால் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் தேவையில்லை என முன்மொழியப்பட்டன. இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சரிடம் கவனத்திற்கு கிழக்கு மாகாண மாணவர்கள் எதிர் கொள்கின்ற பயங்கரவாதம், போக்கு வரத்து தொடர்பான பிரச்சினையினைகள் முன்வைக்கப் பட்டமையினைத் தொடந்து மருத்துவ பீடம் ஆரம்பிப்பதற்கான அனுமதி பெறுவதற்கான இணக்கம் எட்டப்பட்டன.
கேள்வி : - நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டீர்கள் இருப்பினும் தேசிய கல்விக் கல்லூரி மட்டக்களப்பில் நிறுவுவதற்கு எவ்வாறான பங்களிப்பு உங்களால் வழங்கப்பட்டன.
பதில் : - எனது முயற்சியின் பலனாகவே மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் தேசிய கல்விக் கல்லூரி நிறுவப்பட்டது. அதனை யாரும் மறுக்க முடியாது. காரணம் கல்விக் கல்லூரியினை நிறுவுவதற்கான காணியினை தேர்ந்தெடுப்பதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டன. அப்போது கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாழங்குடாவில் கல்விக் கல்லூரி அமைப்பதற்கு பொருத்தமற்ற இடம் சத்துருக் கொண்டான் பிரதேசமே பொருத்தமானது என எதிர்ப்பினைக் காட்டினர்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடமுள்ளன. அபிவிருத்தியினை நோக்காகக் கொண்ட எனக்கு அவர்களின் எதிர்ப்பு பெரிதாகத் தென்படாத காரணத்தினால் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்ற பொறுப்பு என்னைச் சார்ந்தமையால் தாழங்குடா பிரதேசத்தில் கல்விக் கல்லூரியினை நிறுவுவதற்கான அனுமதியினைப் பெற்று உலக வங்கியின் நிதி உதவியுடன் பிரமாண்டமான கல்விக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.
கேள்வி : - கல்வி தவிர்ந்த வேறு எவ்வாறான வேலைத்திட்டங்கள் உங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன?
பதில் : - மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் நான் பிரதி அமைச்சராக இருந்த குறுகிய கால கட்டத்தில் பிரதேச மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக மகிழூர், களுதாவளை, புதுக்குடியிருப்பு, தேற்றாத்தீவு, போன்ற பிரதேசங்களில் கிராமிய வைத்தியசாலைகளை நிறுவியது மட்டுமல்லாது மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வசதிகளும் என்னால் செய்து கொடுக்கப்பட்டன.
அத்துடன் பல இடங்களில் கலாசார மண்டபங்களை நிறுவியிருக்கின்றேன். பல பாடசாலைகள் தரமுயத்தப் பட்டிருக்கின்றன. பலருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றேன். மட்டக்களப்பு நகர விஸ்தரிப்பு தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதனை செய்து முடிக்காத நிலை ஏற்பட்டது. எனது அபிவிருத்தியினை கணக்கிட முடியாது. முழு நேர அபிவிருத்தியில் ஈடுபட்டதுடன் தற்போதும் அபிவிருத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.
கேள்வி : - மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் முழுமையாக அர்பணித்த நீங்கள் முன்னர் பொது ஜனஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் பிரதி அமைச்சராக இருந்து தற்போது நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியினை சந்தித்த போதிலும் வர்த்தக வணிக துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கின்றீர்கள் இதன் மூலமாக எவ்வாறான அபிவித்தியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தவுள்ளீர்கள்?
பதில் : - அபிவிருத்தி தொடர்பாக மாவட்டத்தினை பிரதி நிதித்துவப் படுத்துகின்ற இணைத் தலைவர்கள் கூடிய கவனம் செலுத்தினாலும் எனது அமைச்சின் ஊடாகவும் ஏனைய அமைச்சுக்களின் உதவியுடன் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். அபிவிருத்தி தொடர்பாக தீர்மானிப்பது இணைத் தலைவர்களைச் சார்ந்தது. இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களுடன் நேரில் கலந்துரையாடியிருக்கின்றேன். குறிப்பாக விவசாயம், மீன்பிடி, வீடமைப்பு வசதிகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
கேள்வி : - மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான விதவைகள் காணப்படுகின்றனர் அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு எவ்வாறான திட்டங்களை வகுத்துள்ளீர்கள்?
பதில் : - மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத் தொழில் பேட்டையினை அமைக்குமாறு பிரதமரிடன் கோரிக்கை விடுத்த போது எதிர் வரும் காலங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து பாரிய கைத்தொழில் மையங்களை மாவட்ட ரீதியாக நிறுவுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாக நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். அதன் ஊடாக பெருமளவானவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக பின்தங்கிய கிராமங்களில் பேதங்களை மறந்து சுகாதார மேம்பாட்டு திட்டங்களை துரிதமாகச் செயற்படுத்தப்படவுள்ளன. என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment