24 Feb 2016

அனர்த்த முகாமைத்துவப் பணியில் ஈடுபடுவோர் எப்போதும் தம்மைப்பயிற்றுவித்து எவ்வேளையிலும் செயற்படத் தயாராயிருத்தல் வேண்டும். – த.வசந்தராஜா

SHARE
அபாயம் எப்போதும் எங்கேயும் தாக்கலாம். அது படிப்படியாகவும் நிகழலாம் திடீரெனவும் நிகழலாம். எனவே மக்களுக்கான அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யும் பணியாளர்கள் தம்மை எப்போதும் பயிற்றுவித்து எவ்வேளையிலும் செயற்படத்தயாராயிருத்தல் வேண்டும். என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.
கிராம அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் தலைவர்களாக செயற்பட்டு கிராமங்களில் ஏற்படும் அனர்த்தங்களை கையாளும் அதிகாரத்தையுடைய கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அனர்த்த முகாமைத்துவ மீள்பயிற்சி ஒன்று கல்லடி பிரிட்ஜ் வியூ விடுதி மண்டபத்தில் செவ்வாய்க் கிழமை (23) நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மெலும் குறிப்பிடுகையில்…

நமது நாட்டைப் பொறுத்தவரையில் தேசிய மட்ட அனர்த்தத்தை கையாளும் அதிகாரம் நாட்டு தலைவரிடமும் மாவட்ட அனர்த்தத்தை கையாளும் அதிகாரம் அரசாங்க அதிபரிடமும்; பிரதேச மட்ட அனர்த்தத்தை கையாளும் அதிகாரம் பிரதேச செயலாளரிடமும் கிராமத்தில் ஏற்படும் அனர்த்தத்தை கையாளும் அதிகாரம் கிராம உத்தியோகத்தரிடமும் உள்ளது. 

கிராம உத்தியோகத்தர்கள்தான் கிராம மட்டத்தில் செயற்படும் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் தலைவர்களாக செயற்பட்டு வருகின்றனர். கிராம உத்தியோகத்தர்களுக்குள்ள பல்வேறு கடமைகளுக்கு மத்தியில் அனர்த்த குழுக்களையும் முறையாகப் பயிற்றுவித்து வழிநடாத்த வேண்டிய பாரிய பொறிப்பினையும் அவர்கள் கொண்டுள்ளனர். கிராம உத்தியோகத்தர்கள் தங்களுக்கான இப்பொறுப்பினை  சரியாக நிறைவேற்றுவதற்கு கிராமங்களில் உள்ள அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பினையும் வழங்குதல் வேண்டும். 

இங்கு நடைபெறும் மீள்பயிற்சியின்போது அனர்த்தம், அபாயம், ஆபத்து, பாதிப்புறுநிலை, அனர்த்தத்தடுப்பு, அனர்த்தத்தணிப்பு முதலான சொற்களுக்கான ஆழமான அர்த்தத்தை புரிந்து கொள்வது அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும் கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவுறுப்பினர்களை பயிற்றுவிப்பதற்கும் அவ்வறிவு பேருதவியாக இருக்கும் என்றார்

SHARE

Author: verified_user

0 Comments: