6 Jan 2016

குருக்கள்மடம் கிராமமானது தமிழர் கலாசாரத்தையும், விழுமியங்களையும் பேணிப் பாதுகாக்கும் கிராமமாகும் - சிறிநேசன்.எம்.பி.

SHARE
குருக்கள்மடம் கிராமமானது தமிழர் கலாசாரத்தையும், விழுமியங்களையும் பேணிப் பாதுகாக்கும் கிராமமாக எமது பிரதேசத்தில் விளங்குவதோடு வரலாற்றுப் புகழ் மிக்க ஓர் கிராமமாகும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம், இதற்கு ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக இக்கிராமத்தில் அமைந்துள்ள சிவநெறிமன்றத்தின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டத்தக்கதாகும், என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் கடந்த 1975.01.01 முதல் இயங்கிவரும் சிவநெறிமன்றத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் வல்லிபுரம் குணசேகரம் தலைமையில் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

குருக்கள்மடம் சிவநெறிமன்றமானது, நியாயத் தன்மை, வெளிப்படைத் தன்மை, என்பவற்றுடன் இயங்கி வருவதனால் ஏனையவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை. அறநெறிவழியில் இம்மன்றத்தினர் தங்களால் நடாத்தப்பட்டுவரும் சிவநெறிமன்ற அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவியான இளங்கோ யேதாஸ்வினி என்ற மாணவியை தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்குபற்றச் செய்து இக்கிராமத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்கள். 

மேலும் இம்மன்றம், திட்டமிட்ட கட்டுமானத்துடனும் கட்டுக்கோப்புடனும் செயற்பட்டு வருகின்றமையினால் 41 ஆவது ஆண்டு நிறைவை தற்போது, வெகுவிமர்சையாக கொண்டாடும் பாக்கியம் இவர்களுக்குக் கிடைத்துள்ளதையிட்டு நானும் மனமகிழ்வடைவதோடு இம்மன்றத்தினரையும் இவ்வேளையில் பாராட்டுகின்றேன் என அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலய பிரதம குரு கிரியாஜோதி, சோதிடசிகாமணி சிவஸ்ரீ வே.கு.நாகராசா குருக்கள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை உறுப்பினர் ந.புவனசுந்தரம் ஆலய பரிபாலனசபைத் தலைவர் வீ.மகேஸ்வரன், வண்ணக்குமார் மன்றத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: