21 Jan 2016

ஊடகவியலாளர்களின் சமூகப்பொறுப்பும் பணியும்- சுகிர்தராஜன் நினைவுப் பேருரை

SHARE
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்முனை வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெறும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுப் பேருரையில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியருமான பாரதி இராஜநாயகம் ஊடகவியலாளர்களின் சமூகப்பொறுப்பும் பணியும் என்ற தலைப்பில் நிகழ்த்துவார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வடக்கு கிழக்கு, தெற்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நினைவு அஞ்சலி நிகழ்வில், சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களின் நினைவலைகள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள், அவர்களது உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆவணப்பட வெளியீடும் இடம்பெறவுள்ளது.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் திருகோணமலை ஊடகவியலாளர்களான எஸ்.அச்சுதன், முகமட் சாலி, லேக் கவுஸ் ஆசிரியர் பீட பிரதானி சமன் வகாராச்சி, அம்பாறை மாவட்டத்தின் ஏ.எல்.எம்.சலீம், கே.சரவணன், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பெர்டி கமகே உள்ளிட்டோர் உரையாற்றுவார்கள்.

1969 டிசம்பர் 12 ஆம் திகதி மட்டக்களப்பு - குறுமன்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலை உவர்மலையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுகிர்தராஜனின் தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும், உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி, என்பவற்றிலும் பயின்றார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஸ்து;தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் பணியில் சேர்ந்தார்.

திருகோணமலையில் இருந்து சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்ரோ நியூஸ், ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற பெயரிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: