10 Dec 2015

இந்தநாட்டில் எல்லாமக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு நடைமுறைக்காக நாம் ஒத்திகைபார்த்துக் கொண்டிருக்கின்றோம்... கிழக்கு விவசாயஅமைச்சர்.

SHARE

இந்த நாட்டில் ஒருசிறப்பான அரசியலை, இந்தநாட்டிலுள்ள எல்லாமக்களும் இணைந்து வாழக் கூடிய ஒருநடைமுறையை உருவாக்கிட முடியுமா என்று நாம் தற்போது ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாணவிவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - குருமண்வெளி இளவரசி சீர்பாததேவி பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு மேற்படி அமைச்சரின் நிதிஒதுக்கீட்டில் சீருடைகள், புத்தகப் பைகள் என்பன வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் கிழக்குமாகாணசபைஉறுப்பினர் நடராசா மற்றும் வலயக் கல்வி உத்தியோகஸ்தர், பாலர் பாடசாலைகளுக்கான அலுவலகர், கிராமசேவை உத்தியோகஸ்தர் மாணவர்கள் பெற்றோர்கள் பிரதேசப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாலர் பாடசாலைகள் என்பது கல்வியின் அடிப்படையான அத்திவாரமாக அமைகின்றன. ஆனால் இன்னும் இந்தவிடயம் அரசு மட்டத்தில் பெரிதளவில் உணரப்படவில்லை இதன் காரணமாகத்தான் இந்தப் பாலர் பாடசாலைகள் எல்லாம் வெறுமனே தனியார் பாடசாலைகளாக இருக்க வேண்டிய அவலநிலை இருக்கின்றது.

உண்மையில் குழந்தைகளை பாடசாலைகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொடுக்கின்ற மிக முக்கியமான பணியை இந்தப் பாலர் பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாடுகளில் எல்லாம் இந்தப் பாலர் பாடசாலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. கல்வியின் முக்கியத்துவம் அது ஆரம்பிக்கப்படும் இடத்திலேதான் இருக்கின்றது. குழந்தைகள் ஒருநாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும் இடமாக இந்தப் பாலர் பாடசாலைகள் திகழ்கின்றன.

எமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து கோணல் மாணலான சிந்தனை கொண்டவர்கள் இந்தநாட்டை வழிநடத்தியதன் காரணமாக இன்னும் நாம் முன்னேற முடியாதவர்களாகவும். எமது முன்பள்ளிகளை வெறுமனே சிறுபிள்ளைகள் செல்கின்ற பள்ளிகளாகக் கற்பனை செய்கின்றவர்களாகவே இருக்கின்றோம். 

இது மாறவேண்டும் என்பதற்காகத் தான் புதிய அத்தியாயம் இன்று புரட்டப்பட்டிருக்கின்றது. அந்தப் புதிய அத்தியாயத்திலே தமிழர்களும், தமிழ்பேசும் மக்களும், அவர்களைத் தலைமைதாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் தற்போது ஒத்திகைபார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்தநாட்டில் ஒருசிறப்பான அரசியலை இந்தநாட்டில் உள்ள எல்லாமக்களும் இணைந்து வாழக் கூடிய ஒருநடைமுறையை உருவாக்கிட முடியுமா?

எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தையோ வேறுநிறுவனங்களையோ எதிர்பார்க்கத் தேவையில்லை நாம் முயன்றால் எதையும் செய்துவிடலாம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போலநாம் ஒற்றுமையாக இருந்தால் அனைத்து விடயங்களையும் சாதித்துவிடலாம். 

நாங்கள் எங்களுடைய சுயத்தை உணர்ந்து எங்களுடைய பலத்தை உணர்ந்து எங்களுடைய பெறுமதியை உணர்ந்து நாங்களே சில வேலைகளைச் செய்யத் தொடங்கினோம் என்றால் எமது ஒவ்வொரு கிராமங்களும் அதன் சொந்தக் காலில் நிற்க முடியும். 

நாங்கள் வெறுமனே குடிப்பரம்பலை மாத்திரம் அதிகரித்துக் கொண்டு செல்வது என்பது எவ்வளவிற்கு சரிஎன்று நான் கூறவில்லை ஆனால் நாம் பெற்றெடுக்கும் ஒவ்வொருபிள்ளைகளையும் அறிவாளிகளாகவும் தைரியசாலிகளாகவும் வீரர்களாகவும் ஆக்குவதன் மூலம் நாம் எமது சமுதாயத்திற்குப் மிகப்பெரியபங்கினை ஆக்கமுடியும் என்று தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: