மக்களை நேசிக்கும் தலைவர்களை விமர்சித்து, துரோகிகளாக சித்தரித்து கிழக்கில் தலைமைகளே உருவாகக் கூடாது என கங்கணங்கட்டி செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகள் என தம்மைச் சொல்லிக் கொள்ளும் சூட்சுமமான வரலாற்றிற்கு நான் என்ன விதி விலக்கா என சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதி மன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட சி.சந்திரகாந்தன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மண்ணையும் மக்களையும் நேசித்த தாம் உள்ளிட்டவர்கள் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒருவரை ஒருவர் சந்தேகக்கண் கொண்டு நோக்காவண்ணம் நிதி, நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இனம், மதம், மொழி, கடந்து தாம் தனது கடமைப்பாடுகளை முன்னெடுத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தமக்கும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் அதனை கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாகவும் சிவநேசதுறை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலக மக்களின் விடியலுக்காய் உயிர்ப்பித்த யேசுபாலகன் பிறந்த இந்த மாதத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தன்னை அரசியல் பழி தீர்க்க முற்படுவதனை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சிவநேசதுறை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment