விவசாயிகளுக்கான உர மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும் நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறும் கோரி அம்பாறை மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கல்லோயா விவசாய ஒருங்கிணைப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவந்த உர மானியத்தை தொடர்ந்து அதேமுறையில் வழங்குமாறும் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டக்கமைய நெல்லுக்கான உத்தரவாத விலையின் படி நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
'காசு வேண்டாம், உரத்தைக் கொடு', 'விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே', 'விவசாயத்துறையை அபிவிருத்தி செய்', 'விவசாயிகளுக்கான காப்புறுதியையும், விவசாயிகள் ஓய்வூதியத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடு' போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்ட இறுதியில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்கவிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் விவசாயிகள் அமைப்பின் தலைவர் கையளித்தார் இக்கோரிக்கைகள் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்டச் செயலாளர் இதன் போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment