வட, கிழக்கு மக்களின் காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் மீண்டும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச அதிகாரிகள் மக்களுக்கு பாரபட்சம் இன்றி செயற்பட வேண்டும் எனவும், அவர்கள் பணத்திற்காக செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் வடகிழக்கு மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த நல்லாட்சி அரசாங்கத்திலாவது அதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
100 கிராமங்களைக் கொண்ட இந்த பகுதியில் 1000 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் வாழ்வுக்கு நிரந்தர தீர்வை நல்லாட்சி அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், நியாயமான தீர்வு இன்று வரையும் கிடைக்கவில்லை எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு லட்சத்து இரண்டாயிரம் விதவைகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
குறித்த விதவைகள் இன்றும் குடிசைகளில் வாழ்ந்து வருவதாக பாராளுமன்றத்தில் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டினார்.
அவர்களுக்கான தீர்வொன்றை பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் இன்று பாராளுமன்றத்தில் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment