18 Dec 2015

கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ள  "கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016" தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று வெள்ளிக் கிழமை (18) இலங்கை முதலீட்டு சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சர்வதேச முதலீட்டு அரங்கம்  பிரமாண்டமான  வெற்றியைத் அளித்ததைத்  தொடர்ந்து அந்த மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்  நசீர் அஹமட்  தற்போது இரண்டாவது முதலீட்டு அரங்கமொன்றை அடுத்த ஆண்டு ஏற்படுத்த  திட்டமிட்டுள்ளார்

கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான இலக்கு என்று  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார் .  

அவரது இந்த முயற்சிக்கு முதலீட்டு சபை  ஏற்றுமதி அபிவிருத்தி சபை கிழக்கு மாகாண சபை  பொருளாதார அபிவிருத்தி அமைச்சு. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு இலங்கை சுங்கம்  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி   அதிகார சபை ஆகியன பூரண பங்களிப்பை நல்கி வருகின்றன  . 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஆகிய தலைவர்களின் ஆசிர்வாதமும் அனுசரணையும் பூரண ஒத்துழைப்பும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின்  இந்த அரிய  முயற்சிக்கு கிடைத்து வருகிறது .

அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொழும்பு  கலதாரி ஹோட்டலில்  இல் நடைபெறவுள்ள இந்த பொருளாதார ஊக்குவிப்பு அரங்குக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமை தாங்குகிறார் . 

சர்வதேச முதலீட்டாளர்களையும் உள்ளூர் முதலீட்டாளர்களையும் கிழக்கில் கவனம் செலுத்தி அந்தப்  பிரதேசத்தின் மூல வளங்களையும் மனித வலுவையும் முறையாகப்  பயன்படுத்தி பொருளாதாரத்  துறையில் அந்த மாகாணத்தை  மேம்படுத்துவதே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் திட்டமாகும் .  இந்த வருடம் அமுல்படுத்தப்பட்ட முதலாவது சர்வதேச முதலீட்டு அரங்கின் வெற்றியை அடுத்து முதலீட்டாளர்கள்  மீண்டும்   தமது முதலீட்டு  ஆர்வத்தை கிழக்குப்  பிரதேசத்தில்  வெளிக்காட்டி  வருகின்றனர் . 

கிழக்கு மாகாண முதலமைச்சு உலகளாவிய ரீதியில் சுமார் 500 முதலீட்டாளர்களை இந்தத்  திட்டத்தில் உள்ளீர்க்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது . யுத்த காலத்தில் கை விடப்பட்ட இந்தப்  பிரதேச வளங்களை  மீண்டும் உயிர்ப்புள்ளதாக மாற்றுவதற்கான முழுமையான முயற்சிகளை  இந்த முதலீட்டு அரங்கம் வழங்கும் . புலம்பெயர்  சமூகமும் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது .

அடுத்த வருடம் கொழும்பில் இடம்பெறவுள்ள முதலீட்டு  வர்த்தக சமூகத்தின் அரங்கிலே கைத்தொழில் விவசாயம் மீன்பிடி கால்நடை  உல்லாசப்பயணம் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை  பிராந்தியத்தில் முன்னேற்றுவதற்கான   சர்வதேச முதலீட்டாளர்களின் நேரடி முதலீட்டை கவர்ந்திழுப்பதற்கான கருத்திட்டங்களும்  வழங்கப்படவுள்ளன . 

இந்தப்  பிராந்தியத்தில் புதிய தொழில்நுட்பங்களையும் நவீன முறையிலான செயற்திட்டங்களையும் பயன்படுத்துவது தொடர்பிலும் குறிப்பாக கலந்துரையாடப்படவுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: