18 Dec 2015

ஊடகவியலாளர்கள் எவ்வித அச்சமுமின்றி செயற்பட முடியும்

SHARE
ஊடகவியலாளர்கள் எவ்வித அச்சமுமின்றி செயற்பட முடியும் என நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
வெகுசன ஊடகத்துறை அமைச்சின் அசிதிசி வெகுசன ஊடகத்துறை புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று முழுமையான ஊடக சுதந்திரம் உள்ளதாகவும் எவ்வித பயமுமின்றி, சரியான, நேர்மையான, நீதியான முறையில் செய்திகளை வௌியிட முடியுமான சூழல் தற்போது காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு அரசும் தரமான திட்டங்களை அறிமுகம் செய்தால் அந்த திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர்,
ஏனைய வருடங்களை விட இம்முறை அதிக எண்ணிக்கையான ஊடகவியிலாளர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் போன்றே ஊடகத்துறைக்கும் செல்வதற்கு எந்தவித துறைசார் கல்வியும் தேவையில்லை எனக் குறிப்பிட்ட கயந்த கருணாதிலக்க,
அந்த இரு துறைகளிலும் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி, நுணுக்கமான சிந்தனை, தீர்க்கமான பார்வை மற்றும் அனுபவம் தேவை எனக் கூறியுள்ளார்.  
ஊடகவியலாளர்களின் அறிவு, திறமை, தகைமை என்பவற்றை மேம்படுத்த வெகுசன ஊடகத்துறை அமைச்சு இத்தகைய புலமைப்பரிசில்களை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
முன்னர் போன்று அல்லாமல் இன்று ஊடகத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களும் அதற்கேற்ப தமது அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் நலன்புரி தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும் நிதியமைச்சு, வங்கி மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி மாதாந்தம் சிறிய தொகை செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கான வீடு கட்டும் ஆரம்ப கட்ட பணிகளையும் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,  
வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பிலும் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: