17 Nov 2015

அமெரிக்க-இலங்கை பங்காளித்துவத்திற்கான சந்தர்ப்பங்களை காட்சிப்படுத்தும் அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015

SHARE
கொழும்பு கலதாரி ஹோட்டலில், இன்று செவ்வாய்க் கிழமை (17)  ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ள அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 இல் பல துறைகளையும் சேர்ந்த முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்திகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமரிக்க தூதரகம் இன்று செவ்வாய்க் கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தக கண்காட் நாளை புதன் கிழமையும் (18) நடைபெறவுள்ளது, இதற்கான அனுமதி பொது மக்களுக்கு இலவசமாகும். 

அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப், மற்றும், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டனர். 

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார உறவை விரிவாக்கவும், இருதரப்பு வர்த்தகத்தை விஸ்தரிப்பதற்கும் புதிய மற்றும் மகத்தான சந்தர்ப்பம் ஒன்று உள்ளமை தெளிவாகின்றது என இதன்போது அமெரிக்கத் தூதுவர் கேஷப் குறிப்பிட்டார். 

உலகில் உயர்தரமான உற்பத்திகளை தயாரிக்கும் மற்றும் சேவைகளை வழங்கும், மிகவும் நம்பகமான வர்த்தகப் பங்காளர்களாக அமெரிக்க நிறுவனங்கள் விளங்குகின்றன. என தூதுவர் கேஷப் மேலும் இதன்போது தெரிவித்தார். 

புதிய வர்த்தக பங்காளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை கண்டறிவதற்கான, தமது உற்பத்தி மற்றும் சேவைகளை விரிவாக்குவதற்கான மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு உள்ளுர் வர்த்தக சமூகம் மற்றும் பொது மக்கள் அமெரிக்காவின் 30 முன்னணி நிறுவனங்களை சந்திப்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 வழங்குகின்றது. 

போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், உணவுத் தயாரிப்பு, விவசாயம், அழகுசாதனப் பொருட்கள், தளபாடங்கள், இயந்திர கருவிகள், கல்வி மற்றும் சக்தி போன்ற பிரதான துறைகளைச் சேர்ந்த அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 இல் இடம்பிடித்துள்ளன. இவற்றில் சில அமெரிக்க நிறுவனங்கள்  இலங்கையில் ஏற்கனவே கால்பதித்துள்ள நிலையில், ஏனையன புதியவையாகும். எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 


SHARE

Author: verified_user

0 Comments: