கிழக்கில் தமிழ் - முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழும் நிலையைக் குழப்ப முயற்சிக்க வேண்டாமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க அரசின் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியால் அபிவிருத்தி செய்யப்படவிருக்கும் 08 பாடசாலைகள் தொடர்பில் இன ரீதியான பார்வையில் கருத்துக்கள் பரிமாறப்படுவது, கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழும் நிலையைக் குழப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் இரு சமூகமும் இணைந்த நல்லாட்சியை கூறு போடவும் எடுக்கும் முயற்சியாகும். எனவே இது பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டியது எனது கடமையாகும்
அமெரிக்க அரசு 2007ம் ஆண்டு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்கள் தற்காலிகமாக ஒதுங்கும் இடங்களாகிய பாடசாலைகளை அவர்களைப் போஷிக்கும் வகையிலான அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இத் திட்டத்தினை ஆரம்பித்தது.
இதன் முதல் கட்டமாக 2007ம் ஆண்டு மூதூர் வலயத்தில் 07 பாடசாலைகளும், மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 02 பாடசாலைகளும், கல்குடா மற்றும் பட்டிருப்பு வலயங்களில் தலா 01 பாடசாலையும் என மொத்தமாக 11 பாடசாலைகளை அபிவிருத்தி செய்து 2011ம் ஆண்டில் கையளித்தது.
இதில் 10 தமிழ் பாடசாலைகளும் 01 முஸ்லிம் பாடசாலையும் அடங்கும். இதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 5.42 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத் தெரிவு இடம்பெற்ற போது கிழக்கு மாகாணசபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத் திட்டத்தின் இரண்டாவாது கட்டம் 2012ம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 08 பாடசாலைகள் தெரிவுசெய்யபட்டன. கல்முனை வலயத்தில் 03 பாடசாலைகள், மட்டக்களப்பு மத்தி வலயத்தில் 03 பாடசாலைகள், அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை வலயங்களில் தலா ஒரு பாடசாலை என 07 முஸ்லிம் பாடசாலைகளும், 01 தமிழ் பாடசாலையும் இதில் அடங்கும்.
இவற்றிற்கான உத்தேச செலவு மதிப்பீடு 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இத்தெரிவு இடம்பெற்ற 2012ம் ஆண்டு தற்போதைய மாகாணசபை ஆட்சியில் இருக்கவில்லை என்பதும் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான ஆட்சியே அதிகாரத்திலிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விரு திட்டங்களிலும் மொத்தமாக 19 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் 11 தமிழ் பாடசாலைகளும் 08 முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 5.2 மில்லியன் டொலர்களாகும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 3.4 மில்லியன் டொலர்களாகும்.
உலகின் மிகத்திறமை வாய்ந்த ஆய்வாளர்களைக் கொண்டே அமெரிக்க அரசு இப்பாடசாலைகளைத் தெரிவு செய்துள்ளதாக அமெரிக்க அரசின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி வந்த மைக்றீட் என்பவர் என்னிடம் தெரிவித்தார்.
இந் நிதி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் புகலிடம் கோரும் பிரதேசங்களுக்கானதாகும். எனவே இவ்வாறு எமது பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பெருமளவு நிதியை எமது மாகாணத்துக்கு வழங்கிய அமெரிக்க மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் தாம் இதுவரை வழங்கிய உதவிகளுக்கும் மேலாக ஒன்பது இலட்சம் அமெரிக்க டொலர்களை சம்பூர் பிரதேச மாணவர்களின் கல்விக்காக செலவிட முன்வந்துள்ளனர். இதற்கான கள ஆய்வினை அண்மையில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் சகிதம் சம்பூர் பிரதேசத்துக்கு சென்று அமெரிக்கப் பொறியியலாளர்கள் மேற்கொண்டனர்.
மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வருகை தந்து கிழக்கு மாகாண சிங்களப் பிரதேசங்களிலுள்ள வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்படும் பிரதேசங்களிலுள்ள மக்கள் புகலிடம் கோரும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதாக எமக்கு வாக்குறுதியளித்துள்ளனர்.
இந்த நிதி ஒதுக்கீடு சம்மந்தமாக ஆளுனருடைய தலைமையில் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் அமெரிக்க குழுவினர், மாகாண சபை பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் பணிப்பாளர் உட்பட நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்ட போது, இதற்கான தெளிவும் இவற்றுக்குரிய நியாங்களும் அங்கு கலாந்தாலோசிக்கப்பட்டு இது கட்டாயம் செய்து முடிக்கப்படவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிழக்கிற்கு வழங்கப்படும் நிதி இனவாதம் போன்ற காரணங்களால் இல்லாமல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக நான் எடுத்த பெருமுயற்சியை தவறாக விளங்கிக் கொண்டு என் மீது இனச்சாயம் பூசநினைக்கும் சில அரசியல்வாதிகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
கிழக்கு மாகாணசபை ஒருபோதும் இனவாதத்தை எச்சந்தர்பத்திலும் கையிலெடுக்காது என்பதை உறுதியாகக் கூற விரும்புகின்றேன்.
0 Comments:
Post a Comment