
இந்தப் படத்தின் இயக்குநரான கணேசன், பெங்களூரில் வசித்துவரும் தமிழர். பல கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவரது முதல் தமிழ்ப்படம் தான் ‘போர்க்களத்தில் ஒரு பூ’.
இந்தப் படத்தின் இயக்குநர் கணேசன் இதுகுறித்து தெரிவிக்கையில்,
இசைப்பிரியாவுக்கு அறிமுகம் ஆனவர்கள் கனடா, லண்டன், பாரீஸ் போன்ற நாடுகளில் உள்ளனர். அவர்களை நேரடியாகச் சந்தித்து தகவல்களைத் திரட்டி இந்தப் படத்தை எடுத்தேன்.
முதன்முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தைத் திரையிட அனுமதி மறுத்தனர்.
படம் வெளியானால் இந்திய - இலங்கை நட்புறவு பாதிக்கப்படும் என்று காரணம் சொன்னார்கள். தமிழீழம் அமைவதை அங்கீகரிப்பதைப் போல் படம் இருக்கிறது என்றார்கள்.
எனவே, மறுதணிக்கைக்கு அனுப்பினேன். டெல்லியில் உள்ள சென்சார் போர்டு உறுப்பினர்கள், இந்தப் படத்துக்கு சான்றிதழ் தர தயாராக இருந்தனர்.
ஆனால், மறுதணிக்கைக்குழுவின் தலைவராக இருந்த நடிகர் எஸ்.வி.சேகரும், ரீஜினல் சென்சார் போர்டு அதிகாரி பழனிச்சாமியும் இந்தப் படத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தடைபோட்டனர்.
எக்ஸாமிங் கமிட்டி, ரிவைசிங் கமிட்டி, டெல்லி கமிட்டி என்ற மூன்று சென்சார் போர்டுகளும் இந்தப் படத்தை நிராகரித்து விட்டன.
படத்தின் முதல் காட்சியில் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றிய காட்சி இடம்பெற்றுள்ளது.
அதை நீக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகரும், பழனிச்சாமியும் சொன்னார்கள்.
பெங்களூரில் பாரதிராஜாவை அழைத்து நான் நடத்திய பொங்குதமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட எடியூரப்பா, ‘தமிழர்கள் என் இதயத்தில் வாழ்கிறார்கள்’ என்று சொன்னார்.
ஆனால், தமிழ்நாட்டில் வசிக்கும் எஸ்.வி.சேகரும், பழனிச்சாமியும் இலங்கைத் தமிழர்களின் அவலங்களைச் சித்திரிக்கும் ஒரு படத்துக்கு எதிராக அரசியல் செய்திருக்கிறார்கள்.
என்னுடைய படத்துக்குத் தடைபோட்டு விட்டார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து மறுதணிக்கைக் குழுவின் தலைவராக இருக்கும் எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது,
குழந்தைகள் பார்க்கும் படங்கள், பெரியவர்கள் பார்க்கும் படங்கள், குழந்தைகளுடன் சேர்ந்து பெரியவர்கள் பார்க்கும் படங்கள், டிக்கெட் இல்லாமல் தனியாகக் காண்பிக்கப்படும் படங்கள் என நான்கு விதமான படங்களுக்கான சான்றிதழ்களை சென்சார் போர்டு வழங்குகிறது.
இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது, ‘இந்தியன் சினிமோட்டோகிராஃபி சட்டம்.’ பெண்களை இழிவுபடுத்தியோ, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது போலவோ காட்சிகளை அனுமதிக்கக் கூடாது என்று அந்தச் சட்டத்தில் உள்ளது.
இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது, நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும்படி காட்சிகள் இருக்கக் கூடாது என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.
ஆனால், இவை எல்லாமே ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படத்தில் உள்ளன.
சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் பேசியதை வியாபார நோக்கில் வெளியில் கொண்டுவரும்போது, அதற்கு தமிழக அரசின் அனுமதி வேண்டும். அதை அவர்கள் தரவில்லை.
அந்தப் படத்தை எடுத்துள்ள கணேசன் என்பவர், குயுக்தியாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமைகள் சரி என்று நான் சொன்னதைப்போல சித்திரிக்கிறார்கள். இசைப்பிரியாவுக்கு நடந்ததைப் போன்ற கொடுமை எந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டாலும் அது கண்டனத்துக்கு உரியது.
அதை யாரும் சரியென்று சொல்லவில்லை. ஆனால், தேவையில்லாமல் முகநூலில் என்னைத் திட்டுவதும், தொலைபேசியில் மிரட்டுவதும் நாகரிகமான செயல்கள் இல்லை.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.
சென்சார் போர்டு தடை காரணமாகப் பெட்டிக்குள் முடங்கிய படங்களின் வரிசையில் தற்போது ‘போர்க்களத்தில் ஒரு பூ’-வும் இடம்பெற்றுள்ளது.
ஓர் இனத்தின் பேரழிவு குறித்த படத்துக்கு இதுதான் கதிபோலும்(நன்றி தமிழ்வின்)
0 Comments:
Post a Comment