கிழக்கு மாகாணத்திலுள்ள எட்டு பாடசாலைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியுதவி தொடர்பாக ஊடகங்களில் வெளியான பல்வேறுபட்ட விமர்சனங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த நிதி உதவி, கிழக்கு மாகாணத்தில் கல்வி வசதிகளையும் அனர்த்த நிவாரண வசதிகளையும் மேம்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தினால் வழங்கப்பட்டதாகும்.
இந் நிதியுதவியை வழங்குவதற்கான பாடசாலைகளை தெரிவு செய்வதில் எமது மாகாணத்தின் இன விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது உண்மையானதாகும்.
ஆனால் இந்த தெரிவு நான் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே நடைபெற்றுள்ளது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடும் தேவையின் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவின் எமது நாட்டிற்கான தூதுவர் எமது மாகாணத்தின் ஆளுநருடன் தொடர்பு கொண்ட பொழுதே இவ்விடயம் எனக்குத் தெரியவந்தது.
இத்திட்டத்தின்படி கல்முனை வலயத்தில் மூன்று பாடசாலைகளும், மட்டக்களப்பு மத்திய வலயத்தில் மூன்று பாடசாலைகளும் சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய வலயங்களில் தலா ஒரு பாடசாலையும் என்ற வகையில் மொத்தமாக எட்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இவற்றில் ஏழு பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளாகவும் ஒரு பாடசாலை மாத்திரம் தமிழ் பாடசாலையாகவும் இருந்தன.
பாடசாலைகளுக்கு வளங்களை ஒதுக்குவதில் கல்வி அமைச்சைப் பொறுத்த வரையில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்ற இனவிகிதாசாரம் இத்தெரிவில் பின்பற்றப்படவில்லை என்பதை ஆளுநர் அவர்களும், நானும் உணர்ந்தோம்.
இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஐக்கிய அமெரிக்க நாட்டின் தூதுவராலயத்திலிருந்து இத்திட்டத்திற்குப் பொறுப்பானவர்களை கௌரவ ஆளுநர் அழைத்திருந்தார்.
இக்கலந்துரையாடல் 4-7-2015 இல் திருக்கோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கௌரவ ஆளுநர், பிரதம செயலாளர், மாகாணக் கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ( மாகாணக்கல்வி அமைச்சின் முன்னாள் கல்விச் செயலாளர்) ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
மாகாணத்திலுள்ள இனவிகிதாசாரத்தை நோக்காது இவ்வாறான ஒரு தெரிவை மேற்கொண்டது பிழையான ஒரு செயல் என்பதை திட்டத்திற்கு பொறுப்பானவர்களிடம் நான் எடுத்துக் கூறினேன்.
கிழக்கு மாகாண சபையுடன் முறையான ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளமல் இவ்வாறு ஒரு தெரிவை செய்தது அரசியல், சமூக ரீதியில் எமக்குப் பல விமர்சனங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதை அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினேன். கௌரவ ஆளுநர் அவர்களும், ஏனைய மாகாண அதிகாரிகளும் இப்பாடசாலைகளின் தெரிவுபற்றி தமது ஆட்சேபணையைத் தெரிவித்தனர்.
இத்தெரிவை மீளாய்வு செய்யும்படி நான் கேட்டுக் கொண்டபோது, செயற்றிட்டம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கையெழுத்திட வேண்டிய இறுதி நிலைக்கு வந்திருப்பதாகவும். பாடசாலைகள் அவற்றுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் முதலிய சகல விடயங்களும் அமெரிக்காவிலுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அனுமதியும் பெறப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினார்கள்.
ஆயினும், இச்செயற்றிட்டத்தின் அடுத்த கட்டம் ஒன்றை செயற்படுத்த இருப்பதாகவும் அதன்போது தற்போதைய பாடசாலைத் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்கக்கூடிய வகையில் மாகாண அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று பாடசாலைகளைத் தெரிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதி கூறினார்கள்.
பாரபட்சமான முறையில் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த கட்டத்தில் பாடசாலைகளை கவனமாக தெரிவு செய்ய வேண்டுமெனவும் ஆளுநர், அமைச்சர் மற்றும் மாகாண சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நிகழ்த்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு வலியுறுத்தி கூறப்பட்டது. அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
பொருளாதார, சமூக உறுதிப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய வகையில், வசதி குறைந்த சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பாடசாலைகளை விருத்தி செய்யும் செயற்றிட்டங்களை ஐக்கிய அமெரிக்க நாடு 2007-2008 காலப்பகுதியிலிருந்து கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
2007-2008 காலப்பகுதியிலிருந்து 2011ம் ஆண்டு வரையும் இவ்வாறாக பதினொரு பாடசாலைகள் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நிதிப்பங்களிப்புடன் (5.423 மில் ஐக்கிய அமெரிக்க டொலர்) விருத்தி செய்யப்பட்டன.
இந்த பதினொரு பாடசாலைகளில் பத்து பாடசாலைகள் தமிழ்ப்பாடசாலைகளாகவும் ஒரு பாடசாலை முஸ்லிம் பாடசாலையாகவும் இருந்தன.
அதன் பின்னர் 2012ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நிதிப்பங்களிப்புடன் (3.218 மில் ஐக்கிய அமெரிக்க டொலர்) ஆரம்பிக்கப்பட்டதே இப்போது பேசப்படுகின்ற எட்டு பாடசாலைகளின் விருத்தி பற்றிய செயற்றிட்டமாகும்.
இதற்கு மேலதிகமாக சம்பூர் மீள்குடியேற்றப்பகுதியில் உள்ள பாடசாலைகளைப் புனரமைப்பதற்காக ஐக்கிய அமெரிக்க நாடு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இதற்காக இத்திட்டத்தின் அமெரிக்க அதிகாரிகளும் எமது மாகாண கல்வி அதிகாரிகளும் கடந்த 27-08-2015இல் இப்பாடசாலைகளை சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
மீளவும் ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்க அதிகாரிகள் குழுவினர் இங்கு வந்த எமது மாகாண கல்வி அதிகாரிகளுடன் இப்பிரதேச பாடசாலைகளின் புனரமைப்பு வேலைகள் பற்றிய திட்டத்தை இறுதி செய்வார்கள்.
அமெரிக்க நாட்டினதோ அல்லது வேறு எந்த நாட்டினதோ உதவிகள் எமது மாகாணப் பாடசாலைகளுக்கு கிடைக்கின்ற போது அது நீதியாக சகல இனப் பாடசாலைகளுக்கிடையிலும் பகிரப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
தற்போது விமர்சிக்கப்படுகின்ற எட்டு பாடசாலைகள் பற்றிய தெரிவும், தொடர்புடைய தீர்மானங்களும் நான் கல்வி அமைச்சராவதற்கு முன்னரான விடயங்களாகும்.
இருப்பினும் ஐக்கிய அமெரிக்க நாட்டினது அடுத்த கட்ட திட்டத்தின்போது சீரானமுறையில் பாடசாலைத் தெரிவுகள் நடைபெறுவதற்கு அமெரிக்க அதிகாரிகளை வழிப்படுத்தியுள்ளேன்.
ஐக்கிய அமெரிக்க நாட்டினது இவ்வாறான திட்டங்களில் எமது மாகாணத்தில் சிங்களப் பாடசாலைகள் எதுவும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் அவதானித்துள்ளேன்.
அடுத்த கட்டமாக செயற்படுத்தவுள்ள திட்டத்தில் சிங்களப் பாடசாலைகளையும் சேர்த்துக்கொள்ள அமெரிக்க அதிகாரிகளை வழிப்படுத்துவேன்.
இந்த எட்டு பாடசாலைகளின் தெரிவு சம்பந்தமாக அரசியல்வாதிகளாலும் சமூகச்செயற்பாட்டாளர்களாலும் கல்வி அமைச்சர் என்ற வகையில் நானும் விமர்சிக்கப்ட்டுள்ளேன்.
விமர்சனம் ஒன்றைச் செய்வதற்கு முன்பதாக பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறியவேண்டியது அவசியமாகும். இவ்விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட பொழுது நான் நாட்டில் இல்லையாதலால் தாமதமாகவே இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டியதாயிற்று. என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment