26 Aug 2015

உண்மையை கண்டறிவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன்

SHARE
பொத்துவில் பிரதான வீதிக்கருகாமையிலுள்ள காணியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட சிலைகளினால் அங்குள்ள சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையை தவிர்ப்பதற்கு  சட்டத்தையும் நீதியையும் மதித்து எந்தவொரு சமூகத்தினரையும் பாதிக்காத விதத்தில் உண்மையை கண்டறிவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன் என பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.முசாரத் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மூவினங்களும் பரஸ்பர நல்லுறவுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் அதனை குலைப்பதற்கான சூழ்ச்சிகளை சில தீய சக்திகள் மேற்கொண்டு வருவதையிட்டு பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும்.
மேற்படி சர்ச்சைக்குரிய காணி மிக நீண்டகாலமாக தரிசு நிலமாகவே காணப்பட்டு வருகின்றது. அந்தக் காணிக்கான உரிமையைக் கோரும் எந்த நபராயினும் அல்லது நிறுவனமாயினும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முடியும்.

அதனை விடுத்து இரவோடு இரவாக திருட்டுத் தனமான முறையில் காணிகளை அபகரிப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க முடியாது. இதனால் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கான சூழ்நிலையையும் இனவுறவில் விரிசலையும் ஏற்படுத்தும்.

மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் விசாரணை செய்து உரியவருக்கான தீர்வை வழங்கும் வரை அனைத்து தரப்பினரும்  வந்திகளையும் பொய்யான தகவல்களையும் நம்பமால், ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தின் மீது சந்தேகம் கொள்ளாமலும் இருந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 
SHARE

Author: verified_user

0 Comments: