3 Aug 2015

தமிழர் பகுதிகளில் மந்தநிலை தேர்தல் பிரச்சாரம்

SHARE

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள போதிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பரபரப்பு இல்லை. 

தமிழர், சிங்களவர் மற்றும் மூவின மக்களும் வாழும் மாகாணம் என கருதப்படும் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேடைகள் அமைத்து நடைபெறுகின்றன. 

சிங்கள பிரதேசங்களில் பிரதான தேசிய கட்சிகளின் தேர்தல் பிரச்சாங்கள் சூடு பிடித்துள்ளது. 

ஆனால் தமிழ் பிரதேசங்களை பொறுத்த வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட மேடை போட்டு ஒரிரு பிரச்சார கூட்டங்கள் தான் இதுவரை நடைபெற்றுள்ளது. 

தமிழ் கட்சிகள் சார்பாக போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களும் சரி தேசிய கட்சிகள் சார்பாக போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களும் சரி, அவர்கள் குறிப்பாக மக்கள் சந்திப்புக்கள் மற்றும் சிறு சிறு கருத்தரங்குகள் மூலமாகத்தான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள். 

இந்த பிரசாரங்களில் தமது கட்சிகளின் கொள்கைகளை விட தங்களுக்கான விருப்பு வாக்கு விடயத்தில் தான் அவர்களின் கவனம் இருப்பதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். 

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் காணப்படும் இந்த தேக்க நிலைக்கு காரணம் ஏனைய இனங்கள் போன்ற அரசியல் விழிப்புணர்வு தமிழர்கள் மத்தியில் ஏற்படவில்லை என அரசியல் விமர்சகரான திருமலை நவம் கூறுகிறார். 

போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இதனை தமிழ் அரசியல் தலைமைகள் செய்ய தவறிவிட்டதாகவும் அவர் கூறுகிறார். தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவித தேக்க நிலை தமிழ் பிரதேசங்களில் காணப்பட்டாலும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பெறக் கூடிய கட்சி ஊடாக தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாகவே இருக்கின்றார்கள் என திருமலை நவம் இங்கு சுட்டிக்காட்டுகின்றார். 

(பிபிசி)

SHARE

Author: verified_user

0 Comments: