இந்திய அரசாங்கம் மற்றும் எகெட் நிறுவனத்தின் மூலம் வாகரை பிரதேச மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட சில படகுகளை அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் பெற்று அவற்றினை அவர்கள், முஸ்லிம் சமூகத்தினருக்கு விற்பனை செய்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பால்ச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
சங்கத் தலைவர் எஸ்.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், கரையோரம் பேணல் திணைக்களத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோகுலதீபன்,
கிராம சேவை உத்தியோகத்தர் நிலாம்சன் குருஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விவேகானந்தன், பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர் எஸ்.தயாளன், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,தற்போது நாட்டின் பல பாகத்திலும் இந்த நூறு நாள் வேலைத்திட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. சென்ற அரசாங்கத்திலும் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் இடம்பெற்றது.
தற்போது நடைபெறுகின்ற வேலைத் திட்டத்திற்கும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்ற வேலைத் திட்டத்திற்கும் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அவர்கள் தான் கஷ்டப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு வந்ததாக கூறி வந்தார்கள்.
அத்துடன் அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கே அதனை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ஒருதொகையினையும் பெற்று அவர்கள் வயிற்றை நிரப்பி வந்தார்கள். அரசாங்கம் மாறலாம் ஆட்சி மாறலாம் அரசியல்வாதிகள் மாறலாம் ஆனால் அபிவிருத்தி என்கின்ற திட்டம் மாறுவதில்லை.
அந்த அரசாங்கத்திலும் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற ரீதியில் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. அது இந்த அரசாங்க காலத்திலும் வழங்கப்படுகின்றது. ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் அதில் சுரண்டல்கள் இடம்பெற்று அது குறைந்தளவு தொகையாகவே வந்து சேர்ந்தது.
இது அரசியல்வாதிகளின் வேலைத்திட்டம் அல்ல அரசாங்கம் மக்களுக்காக செய்கின்ற வேலைத்திட்டம். ஒரு நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு அந்த நாட்டு மக்கள் எல்லோரும் சமமானவர்கள். மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் சொத்து அவர்கள் பிரிவினை பார்க்க முடியாது. நாட்டில் இருக்கின்ற மக்கள் அனைவரையும் சமமாகக் கையாள்வது ஒரு அரசாங்கத்தின் கடமை.
அதுதான் நல்லாட்சியின் ஒரு அடையாளம். எமது பிரதேசங்கள் கடந்த யுத்த சூழலாலும் சுனாமி அனர்த்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசம். அதுபோல் இப்பிரதேசங்களுக்கு பலவித சலுகைகள் கடந்த காலத்தில் கிடைத்தன.
ஆனால் இங்கு வீழ்ச்சியுற்ற மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலைமை இருக்கின்றது. எமது மக்கள் தற்போது மிகவும் சோம்பலாக இருப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. யாராவது எதுவும் தருவார்களா? என்று எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களாகவே நாம் இருக்கின்றோம்.
இந்த நிலைமாற வேண்டும். நாம் உழைத்து வாழ வேண்டும் பிறரிடம் கையேந்தக் கூடாது. உழைக்கின்ற மக்கள் வாழும் இடத்தில் ஆண்டவனின் ஆசீர்வாதம் என்றும் குறைந்ததில்லை. ஆனால் நாம் எவ்வாறு சுரண்டலாம் என்பதைப் பற்றி தான் சிந்திக்கின்றவர்களாக இருக்கின்றோம்.
எனவே நாமும் உழைத்து வாழ முயற்சிக்க வேண்டும். நாம் இன்னும் முயற்சிக்காமல் இருந்தோமாக இருந்தால் என்றும் கையேந்துகின்ற சமூகமாக இந்த நாட்டில் வாழவேண்டி ஏற்படும். அன்பார்ந்தவர்களே அருகில் இருக்கும் இஸ்லாமிய மக்களைப் பாருங்கள் அவர்கள் ஏதாவது ஒரு தொழிலைச் செய்வர்களாக இருக்கின்றார்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது சுயதொழில் இருக்கும்.
ஆனால் நாம் சுயதொழில் செய்வதோ அதில் முயற்சி செய்து பார்ப்பதோ குறைவு. இதிலிருந்து மீள்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அரசதொழிலைச் செய்வதைவிட சுயதொழில் அதைவிட முன்னேற்றத்தினைக் கொடுக்கும். எவருக்கும் பயப்படவும் தேவையில்லை.
எமது மக்களின் முன்னேற்றத்திற்கு என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட அரசின் அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக அதனைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இந்திய அரசினால் 17 அலியா படகுகள் வாகரை பிரதேசத்திற்கு கொடுக்கப்பட்டன.
ஆனால் அதில் ஒரு தொகை படகுகள் இவ்வாகரை பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் குடும்பத்தினர் கைக்குச் சென்றது. இது மக்களுக்கான மீன்பிடிச் சங்கங்களுக்காக கொடுத்த படகுகள். இதனை அந்த மீன்பிடிச் சங்கங்கள் உபயோகித்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக வழங்கப்பட்டவை.
அதனை அவர்களே சுருட்டி விட்டு அதனைத் தாங்கள் வைத்து வாழ்ந்தாலும் பரவாயில்லை அதனை முஸ்லீம்களுக்கு விற்று விட்டார்கள். ஒரு படகின் பெறுமதி குறைந்தது 35 இலட்சம். 17 படகுகள் இந்திய அரசாங்கம், 10 படகுகள் எகெட் நிறுவனம், இவ்வாறு 27 படகுகள் எத்தனை பேர் தொழில் செய்து வாழ்ந்திருக்க முடியும்.
அன்றிருந்த அரசின் தரப்பில் இருந்த அரசியல் வாதிகள் செய்கின்ற வேலையினைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே அரச உத்தியோகஸ்தர்களுக்கு இருந்தது. இவ்வாறு பல இருக்கின்றன. இது ஒரு உதாரணம் மாத்தரமே இன்னும் ஒருவர் பற்றி நான் குறிப்பிடவில்லை அனைத்தும் எமது மக்களுக்குத் தெரியும்.
இதில் எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் அவர்களின் அரசியலிலேயே குறியாக இருக்கின்றார்கள். ஆனால் நாம் எமது மக்களின் உரிமையுடன் கூடிய அபிலாசையில் குறிப்பாக இருக்கின்றோம். எமது பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துடன் கலந்துரையாடி இருக்கின்றோம்.
தேவைப்படும் அபிவிருத்தி அதற்கு தேவையான நிதி மூலங்கள் என்பற்றை குறிப்பிடும் பட்சத்தில் அவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துத் தரமுடியும் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment