மக்கள் தங்களுடைய உரிமையை நிலை நாட்டுவதற்காக மாத்திரமே வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
“இந்த நாட்டில் எமது மக்கள் இதுவரை காலமும் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் போராட்டத்திற்கு ஒரு சாதகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாங்கள் 2015 ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு எமது மக்களிடம் ஆதரவு கேட்டு நீங்கள் அளித்த வாக்குகளின் மூலம் புதிய ஆட்சியை நிறுவினோம்.
நாடாளுமன்றத்தில் எம்முடைய பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே காணப்படுவதன் காரணமாக தமிழ் மக்கள் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றனர்.
அதன் காரணமாக நாங்கள் 1956ம் ஆண்டு தொடக்கம் பிரதேச அபிவிருத்தி நோக்கிய சுயாட்சி என்ற “சமஷ்டி முறையை” எமது தலைவர்கள் கேட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் மூலம் இந்தியாவின் தலையீட்டினால் மாகாண சபை ஆட்சி கொண்டு வரப்பட்டது. வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் எமது மக்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாகாண சபையில் போட்டியிட்டு தற்போது அமைச்சு பொறுப்புக்களையும் பெற்று ஏதோ ஒரு வகையில சேவையாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் 2010 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பியசேன தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் மீண்டும் இம்முறையும் போட்டியிடலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களிடையிலான சந்திப்பில் தீர்மானமெடுக்கப்பட்டது.
ஆனால் நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது என்றால் சமய பணிகளை விட வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையை வேறு யாரிடமாவது பொறுப்புக் கொடுத்து முழு நேர அரசியல் பணியில் ஈடுபட வேண்டும்.
அவ்வாறாக விருந்தால் மாத்திரமே போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படும் என கூறினார்கள். இதுதொடர்பாக நான் எமது தலைவர் சம்பந்தன் ஐயாவிடம் தொடர்பு கொண்டு தெரிவித்த போது அவ்வாறு எதையும் விடத் தேவையில்லை,
உங்கள் சமய பணியை தொடரலாம் இம்முறை தேர்தலிலும் போட்டியிடலாம் உங்களுக்கு வழங்கிய ஆசனத்தை யாரும் மறுக்க முடியாது என்றதுடன் குறிப்பிட்ட நபரிடம் இது விடயமாக தலையிட வேண்டாம் என கூறினார்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே சமய பணிகளையும் இந்து இளைஞர் பேரவையூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும் செய்து வருவது யாவரும் அறிந்திருந்தும் இவ்வாறு கூறுவது வேதனைக்குரிய விடயமாகும்.
2010 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கல்குடா தொகுதியில் எவருமே முன்வராத நிலையில் என்னை வேட்பாளராக நிறுத்தினார்கள்.
எனது தொகுதிக்குரியவர்களான கருணா மற்றும் பிள்ளையானுடைய அச்சுறுத்தல்கள் அடாவடித்தனங்களுக்கு மத்தியில் இறைவனின் அருளினால் மாவட்டத்தில் முதன்மைப் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கான பணிகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளேன், யாரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை நான் செய்த உதவிகளுக்கு பிரதியுபகாரம் கேட்டது கிடையாது,
இதுவரை எனக்கு சொந்த காணி கூட கிடையாது நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தால் எனக்கு வாக்களியுங்கள். நான் மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுவேன்.
மக்கள் தங்களுடைய உரிமைய நிலைநாட்டுவதற்காகவே வாக்குரிமை பயன்படுத்தப்பட வேண்டும் அதை மீறிய சில சலுகைகளைப் பெறுவதற்காக வாக்குரிமையைப் பயன்படுத்தக் கூடாது.
வாக்குரிமையானது வேற காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் அவ்வாறு பாவித்த மக்கள் ஜனநாயகத்தில் உரிமையில்லாதவர்களாக ஜனநாயகத்தைப் பாவிப்பதற்கு தகுதியில்லாதவர்களாகின்றார்கள்.
தேர்தல் காலம் என்றாலே மக்களுக்கு ஊக்கத் தொகையாக கொடையாக பல்வேறு சலுகைகளை வழங்கி வாக்கு கேட்டு வருவார்கள் நாங்கள் விலை போனவர்கள் அல்ல ஜனநாயகத்தை மதிப்பவர்கள் எங்கள் அரசியல் தலைமைகள் எங்களை அவ்வாறு வழிநடத்தவில்லை என்று கூறுங்கள்.
எமது மக்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்ற ரீதியில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எமது அரசியல் சக்தியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீடு சின்னத்துக்கு வாக்களித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்கள் உட்பட வடக்கு கிழக்கிலே 20 ஆசனங்கள் பெற்று புதிய ஆட்சியாளர்களுடன் பேரம் பேசும் சக்தியாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment