25 Mar 2015

மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரச்சினையை இலகுவில் தீர்க்க முடியாது

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை இலகுவில் தீர்க்கப்படகூடியதல்ல என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் சகிதம் ஞாயிறு (22) பகல் விஜயம் செய்த ஆளுநர் அங்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ந்தார்.
 
இதனைத் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர், ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி எதிர்நோக்கும் காணிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்காக அது குறித்த முழுமையான அறிக்கையை அரசாங்க அதிபரிடமிருந்து கோரியிருக்கின்றேன்.
 
எனவே முன்னுரிமை கொடுத்து அதற்குத் தீர்வு காண்பதற்கான முழு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
 
ஏறாவூர் சந்தைப் பிரச்சினை சம்பந்தமாக முதலமைச்சர் முழு விவரங்களடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதாக என்னிடம் உறுதியளித்திருக்கின்றார். அதனடிப்படையில்  அதன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
இங்கே பிரஸ்தாபிக்கப்பட்டவற்றில் முக்கியமான விவகாரமான காணிப்பிரச்சினை என்பது ஒரு சிக்கல் நிறைந்தது. இதற்கு உடனடியாகத் தீர்வு கண்டுவிட முடியாது.
 
மட்டக்களப்பு வாசிகளான சிங்கள மக்கள் தங்களது காணிகளை மற்றவர்கள் அடாத்தாகக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகின்றார்கள். சமாதான சூழ்நிலை ஏற்பட்ட பின்னரும் அதனை அடாத்தாகக் கைப்பற்றியவர்கள் திருப்பித்தர மறுப்பதாக மட்டக்களப்பு வாழ் சிங்கள சமூகத்தினர் கூறுகின்றனர். இதேபோன்ற கருத்தையே முஸ்லிம் சமூகத்தினரும் கூறுகின்றார்கள். இந்த விவகாரம் நகர அபிவிருத்தி அமைச்சர் றவூப் ஹக்கீமிடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
ஆயினும் இது உடனடியாகத் தீர்வு காணக்கூடிய சாதாரண விடயமல்ல. சட்டப் பிரச்சினைகளும் இருக்கின்றன. சட்ட ஏற்பாடுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்ததன் பின்னர் இந்தக் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் என்று அமைச்சர் றவூப் ஹக்கீம் கூறியுள்ளார் என முதலமைச்சர் எனக்கு தற்போது தெரியப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.
 
 
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.எம். முபீன், ஆளுநரின் மனைவி, மற்றும் ஏறாவூர் பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: