3 Mar 2015

ததேகூ தலைமைகளின் சில நடவடிக்கைகள் இன்றைய நிலைக்கு காரணம்

SHARE
கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் நேர்த்தியான சில நடவடிக்கைகள் தாமதமானதன் காரணத்தினால் இன்று நாங்கள் இந்த கிழக்கு மாகாணத்தில் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, புதூர் இந்து இளைஞர் மன்றத்தின் முப்பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் 11 அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் 4 அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 22 அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் தனியாக ஆட்சியமைக்க முடியாது. ஒன்று முஸ்லிம் கட்சியோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும். அல்லது சிங்களக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும், அல்லது மூன்று இனங்களோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. இலங்கை அரசாங்கத்திற்கும் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி புரிந்தவர்களுக்கும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக அந்த ஆதரவானது அளிக்கப்பட்டது. அந்த ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமல்ல.

நாங்கள் ஆட்சியாளர்களாக மாறவும் கடமைகளை பொறுப்பேற்று செயற்படவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. ஆனால் மத்திய அரசாங்கமும் ஏனைய இனத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டதால் இன்று எமக்கு முதலமைச்சர் பதவியில்லை, காணி அதிகாரமில்லை, கல்வியமைச்சு இல்லை, இந்த மாகாணசபை முறைமையில் நாங்கள் பங்குபற்றுவதா இல்லையா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிர்ப்பந்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சேர்ந்து தீர்க்கமான முடிவை எடுக்கவிருக்கின்றோம்.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் நேர்த்தியான சில நடவடிக்கைகள் தாமதமானதன் காரணத்தினால் இன்று நாங்கள் இந்த நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் இந்த நிர்ப்பந்தத்தை தவிர்க்க வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் மிகத் தெளிவாகவும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

காணி அமைச்சு இல்லாத ஒரு ஆட்சியாளர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறப்போகின்றதா? இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலமைச்சரை விட்டுக்கொடுத்துள்ளோம், கல்வி அமைச்சை விட்டுக்கொடுத்துள்ளோம், காணியையும் நீங்கள் விட்டுக்கொடுக்க போகின்றீர்களா என தமிழ் மக்கள் கேட்கின்றனர். காணி அமைச்சு இல்லாத ஒரு அமைச்சினை நீங்கள் பொறுப்பெடுக்க போகின்றீர்களா எனக் கேட்கின்றனர்.

எதிர்காலத்தில் நல்ல ஆட்சியாளர்களாக கிழக்கு மாகாணத்தில் இருப்பதா இல்லையா என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், சந்தித்து உரையாடி ஒரு தீர்க்கமான முடிவினை தெரிவிப்போம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: