20 Feb 2015

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் மட்டக்களப்பு மாணவர்கள்: யோகேஸ்வரன் எம்.பி

SHARE
(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாவது அதிகமாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.


வாகரை பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய மைதானத்தில் அண்மையில் வித்தியாலய அதிபர் பொ.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்த மட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நியமனங்களில் நாம் புறக்கணிக்கப்பட்டோம். இதனால் பலவற்றை நாம் இழந்தோம். இனியும் அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.

இதன் காரணமாகத்தான் எமக்கு முதலமைச்சர் பதவியைப் பெற வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தோம். ஆனால் எமது மக்கள் விட்ட தவறின் காரணமாக 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு எம்மால் அதனை பெற முடியாமல் போய்விட்டது.

இன்று கிழக்கு மாகாணத்தின் மாகாண சபையை கலைந்து ஒரு தேர்தல் இடம்பெறின், நாம் எமது ஆசனங்களை அதிகரித்து சமுகத்தின் கல்வி உட்பட அனைத்து அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும்.

எமது அவசிய தேவைகள் மற்றும் கல்வி ரீதியாக நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து செயற்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆசிரியர் நியமனம், ஏனைய உத்தியோகஸ்தர்கள் நியமனம், பாடசாலை அபிவிருத்தி சம்மந்தமாகவும் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

கல்வியில் மிகவும் அக்கறை காட்ட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் 74 வீதமாக இருந்தும் கல்வியில் பின்னடைவாகவே இருக்கின்றோம்.

மற்றயை இனத்தைக் குறை கூறவில்லை. ஆனால் அவர்கள் கல்வியில் காட்டுகின்ற ஊக்கமும், ஒற்றுமையும் தான் அவர்களை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றது.

அந்த அக்கறையையும், ஊக்கத்தினையும் எமது சமூகத்தால் காட்ட முடியவில்லையே என்பது தான் வேதனையாக இருக்கின்றது. எம்மில் பல பேதங்கள் இருக்கின்றது. அவற்றை மறந்து கல்வியில் ஒன்றுமையுடன் செயற்பட்டு முன்னேற வேண்டும்.

இந்த வகையில் வாகரைப் பிரதேசத்தின் கல்வி நிலையை நாம் தரமுயர்த்த வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலையை தொழில் கூடமாக கருதாது, வீடாக கருதினால் கல்வி நிலையில் முன்னேற்றம் உண்டு.

தற்போது பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகுவது அதிகமாக இருக்கின்றது. இலங்கையில் அதி கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யும் மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்கின்றது. வறுமையிலும் கூடிய மாவட்டமாக இருக்கின்றது.

எனவே எமது வறுமை நிலை குறைக்கப்பட வேண்டும். போதை பாவனை குறைக்கப்பட வேண்டும். கல்வி நிலை உயர்த்தப்பட வேண்டும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டும். இவை யாவும் எமது மக்களின் ஒத்துழைப்புடன் தான் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, வாகரை கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.பரமேஸ்வரன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சுபாஸ்சந்திரன், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.வி.கே.பாலித்த ஜெயரெட்ண, பிரதேச பாடசாலை அதிபர்கள, கல்குடா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: