ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு
எதிராக சாய்ந்தமருது நகரில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத்
தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உருவ பொம்மை ஒன்றை எரிப்பதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட தீர்மானத்தை கண்டித்தே இந்த
ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்ட்டது.
இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன்
அவரது உருவ பொம்மை ஒன்று நடு வீதியில் போடப்பட்டு பாதணிகளால்
அடிக்கப்பட்டதையும் அந்த உருவ பொம்மையை எரிக்க முற்பட்டதையும் அவதானிக்க
முடிந்தது.
எனினும் தீயிடப்பட்ட அந்த உருவ பொம்மையை பொலிசார் உடனடியாக கைப்பற்றி- தீயை அணைத்ததுடன் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் கைகலப்பு
ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் அடிதடி பிரயோகமும்
செய்தனர். பொலிசாரிடம் இருந்து இந்த உருவ பொம்மையை கைப்பற்றுவதற்கு அவர்கள்
முயற்சித்த போதிலும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அது பொலிஸ் ஜீப்பில்
ஏற்றிச் செல்லப்பட்டது.
சுமார் அரை மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனால்
போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே
அங்கு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அம்மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர்
ஏ.எம்.ஜெமீலுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்
அதனை முன்னாள் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு வழங்க கட்சித் தலைவர்
ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளமக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாம் இந்த
ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
0 Comments:
Post a Comment