24 Feb 2015

மட்டு நகரில் சாரணத் தந்தை பேடன் பவுலின் சிலை திறப்பு

SHARE
சாரணத் தந்தை பேடன் பவுலின் பிறந்த தினமான  பெப்பரவரி 22 ஆம் திகதி காலை மட்டக்களப்பு நகரிலுள்ள நீரூற்றுப்பூங்காவில் பேடன் பவுலின் சிலை ஒன்று மட்டக்களப்பு சாரணர்களால் நிறுவப்பட்டது.

இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசியக் கொடி, சாரணர் கொடிகள் ஏற்றப்பட்டு சாரணர்களின் அணிவகுப்பையடுத்து பேடன் பவுலின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,  மாநகர பொறியியலாளர் தேவதீபன், மதப்பெரியார்கள் சிவப்பிரகாசம், அருட்தந்தை எஸ்.ரஜீவன், மௌலவி, வீ.பிரதீபன், ஐ.கிறிஸ்ரி, பி.சசிகுமார், ஏ.அலோசியஸ், ஏ.புட்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஆசியுரைகள், அதிதியுரைகள் நடைபெற்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் சாரணர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலம் மட்டக்களப்பு நகரின் வீதிகள் ஊடாகப் பவனி வந்து மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைச் சென்றடைந்து அங்கு சாரணமார்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

பேடன் பவுலின் 1857 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி லண்டனில் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த பேடன் பவுல், தாயாரால் வளர்க்கப்பட்டார். ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பயின்ற அவர் 1876 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். ராணுவப் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக 1907 ஆம் ஆண்டு 'பிரவுண்சீத்' தீவில் முதன்முதலில் 20 மாணவர்களைக் கொண்டு சாரண இயக்கத்தை ஆரம்பித்தார்.

முதலில் மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சாரண இயக்கம், பேடன் பவுல், 1912 ஆம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓலோவ் ஜோம்ஸ் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தபிறகு அவரது தலைமையில் மாணவிகளுக்காகத் தனியாக சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி ஆரம்பித்த சாரணிய இயக்கம் வெகு விரைவில் வளர்ச்சி பெற்றுப் பல நாடுகளுக்கும் பரவி இன்று உலகளாவிய பேரியக்கமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த இயக்கத்தைத் தேற்றுவித்து வளர்த்த பேடன் பவுலின் துணைவியார் ஓலோவ் அம்மையாரின் பிறந்த நாளும் பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள்தான். இவர்களின் பிறந்த நாளைத்தான் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நினைவு நாள் (திங்கிங் டே) என்று கொண்டாடுகிறார்கள்.

சாரண இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பேடன் பவுல் 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாளன்று காலமானார். இவருக்கு "உலக முதன்மைச் சாரணர்' என்ற விருதும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் "கில்வெல் பிரபு' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
unnamed
SHARE

Author: verified_user

0 Comments: