21 Feb 2015

நல்லதை விதையுங்கள் நல்லது விளையும் - மட்டு செஞ்சிலுவைத் தலைவர் த.வசந்தராஜா

SHARE
இளைஞர் யுவதிகள்; மிகவும் சக்தி படைத்தவர்கள் அவர்கள் எதையும் சாதிக்கக்கூடியவர்கள். நல்லதை செய்யவும், நல்லதை சாதிக்கவுமே! அவர்கள் முயலுதல் வேண்டும். பொது நலம் கருதி எடுக்கின்ற முயற்சிகள் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறும். தன்னலம் கருதி எடுக்கின்ற முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிந்து விடும்.

என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர், யுவதிகளுக்கான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கொன்று, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் வீ. பிறேமகுமார் தலைமையில் இடம் பெற்ற இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு இளைஞர், யுவதிகள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் கருத்து, மேலும் தெரிவிக்கையில்….

நாம் எதை விதைக்கிறோமோ அதையே  அறுப்போம்! என சமயப் பெரியார்களும், அறிஞர்களும், கூறியிருக்கின்றனர். நாம் எறிகின்ற கல் நம்மை நோக்கி ஒரு நாள் திரும்பி வரும். நாம் அடிக்கின்ற தடியினால் நாம் ஒருநாள் அடிபடுவோம்!  நாம் செய்கின்ற நற்காரியங்கள் நல்லவையாக நம்மிடம் திரும்பி வரும். நல்லதை விதைத்தால் நல்லது விளையும், இளைஞர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் எப்படி செயற்படப் போகிறீர்கள் என இப்போதிருந்தே,  திட்டமிடுங்கள் அதனை நடைமுறைப் படுத்துங்கள் நீங்கள் வாழ்வில் நற்பெயர் எடுப்பீர்கள். உலகம் உங்களை விரும்பும். என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்சமூகவிழிப்புணர்வு கருத்தரங்கில், கலந்து கொண்ட, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர், கே.விவேகானந்தநாதன்  கருத்து தெரிவிக்கையில்,  இரத்ததானம்  செய்வது பற்றியும், இரத்தம், வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மிக விரிவாக எடுத்துரைத்தார்.

இதன்போது இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டவராகவும்,  ஐம்பது கிலோ நிறைக்கு குறையாதவராகவும் சுகதேகியாகவும் இருத்தல் வேண்டும் எனவும், குறிப்பிட்ட  மேற்படி வைத்தியர் கருத்தரங்கில் பங்கு பற்றிய இளைஞர் யுவதிகளின் இரத்ததானம் தொடர்பாக எழுந்த பல்வேறுபட்ட வினாக்களுக்கும், சந்தேககங்களுக்கும் அவர் பதிலழித்தார்.

இந்நிகழ்வில் மேலும், புவி வெப்பமடைதல் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் ஓர் அபாயம் என்பதனை சுட்டிக்காட்டியும்,  புவி வெப்பமடைவதை தவிர்க்கும் எளிய வழிமுறைகள் பற்றியும், எளிமையான விளக்கங்களையும், இளைஞர் யுவதிகளுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சீ.கஜேந்திரன்  வழங்கியமையும், குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிமிருந்து  இளைஞர், யுவதிகளும், ஈரிடோ விரி கம்பஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.மயூரனும் கலந்து கொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: