31 Jan 2015

புதிய அரசாங்கம் ஊடகவியலாளர்கள் அவர்களது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு நிலைகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை வந்துள்ளது – ஊடக அமைப்பு

SHARE
சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் மற்றும் நடேசன் உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான நடவடிக்கையினை புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது ஐயாத்துரை நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேபோன்று 2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் சடலம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்த படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடாத்துமாறு கடந்த காலத்தில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்தபோதிலும் அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

அதி உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் வைத்து இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.இந்த கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் கடந்த அரசாங்கத்தினால் கிடப்பில்போடப்பட்டது.இந்த விசாரணையை மீள ஆரம்பித்து கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனையினை பெற்றுக்கொடுக்க புதிய அரசாங்கம் முன்வரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான அடக்கமுறை காரணமாக பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் இந்த நாட்டில் பொறுப்பேற்ற நிலையில் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வரவேற்கின்றது.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான ஏது நிலைகள் ஏற்படும் என்ற நம்பிக்கையினை கொண்டுள்ளனர். அவற்றினை இந்த அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் ஜனநாயகத்தின் குரலாக உள்ள ஊடகத்துறையினரை சுதந்திரமாக செயற்படச்செய்வதன் மூலமே எதிர்காலத்தில் இந்த நாட்டை விட்டு அச்சம் காரணமாக வெளியேறிய ஊடகவியலாளர்களும் இங்குவந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்பதையும் இங்கு நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம்.
SHARE

Author: verified_user

0 Comments: