13 Jan 2015

நாவலடி விபத்தில் யுவதி பலி இருவர் படுகாயம்

SHARE
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாவலடி பகுதியில் செவ்வாயன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலங்குள கிராமத்தில் இருந்து மருத்துவ சேவை பெறுவதற்காக முச்சக்கர வண்டியில் மூலம் தனது தாயுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது கொழும்பு நாவலடி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் குறித்த ஆட்டோவானது வேகமாக வந்து மோதியதினால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

ஓட்டமாவடியில் இருந்து வந்த டிப்பர் லொறி ஒன்று திடீரென திசை திருப்பிய போது, தான் செய்வதறியாது தடுமாறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்துகமையை சேர்ந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக முச்சக்கரவண்டி சாரதி இக்பால் தெரிவித்தார்.

இதன்போது சிவலிங்கம் வினோதா (வயது 18) என்ற யுவதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், தாயாரான சின்னையா நல்லம்மா (வயது 50), ஆட்டோ சாரதியான காவத்தமுனையைச் சேர்ந்த எம்.எம்.இக்பால் ஆகிய இருவரும் காயமுற்றுள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரனைகளின் பின்பு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: