28 Jan 2015

மாகாணசபை உருவாக்கம் தமிழர் தரப்பின் அகிம்சை மற்றும் ஆயுதப் போரட்டங்களின் விளைவேயாகும் - ஜனா

SHARE
நாடு கேட்டு ஐந்து ஊர்கேட்டு ஐந்து வீடு கேட்ட பாண்டவர் நிலைக்கு அன்று சம்பந்தன் ஐயா இறங்கி வந்த போது தூக்கி எறிந்தவர்கள் இன்று காலம் எமக்கு சாதகமாகின்ற போது வழமையான தமது பாணியில் எமது வாய்பை கட்டிப் பறிக்க நினைப்பது தார்மீக அரசியல் நெறிக்கு ஒவ்வாதது என்பதை அவர்கள் உணர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள பகிரங்க அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

மாற்;றத்துக்காக வாக்களித்து நாட்டின் அரசியல் தலைமையை தடம்புரட்டிய மக்கள் வசந்தம் மாகாண சபைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திய விளைவு கிழக்கு மாகாண சபையையும் விட்டு வைக்கவில்லை.

ஆனால் அந்த மாற்றம் அதிகாரப் போட்டியினால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சற்று பின்னோக்கிய வரலாற்றை பார்ப்பின் மாகாண சபை முறைமையானது இலங்கையில் உருவாக ஒரே ஒரு காரணம் தமிழர் தரப்பின் அகிம்சை மற்றும் ஆயுதப் போரட்டங்களின் விளைவேயாகும். இதற்கு தமிழர் தரப்பு கொடுத்த விலை சொல்லில் வடிக்க முடியாது.

இக் காலத்தில் ஆட்சியிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகித்த முஸ்லீம் அரசியல் கட்சிகள் சிறுபான்மை இனத்தவர்களது மொழி, காணி, நிலம், அதிகாரம் தொடர்பான ஏன் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை தமது இணக்க அரசியலூடாக எடுத்துக் கூறி தீர்ப்பதற்கு ஒரு துளியாகவும் முனையவில்லை என்பது கசப்பான உண்மையாகும். முஸ்லீம் கட்சிகளும் தலைவர்களும் முஸ்லீம் மக்களது பிரச்சினையை தேர்தல் காலங்களில் மட்டும் முஸ்லீம் பிரதேசங்களில் உரத்துக் கூறினார்கள் என்பது மட்டுமே உண்மை.
ஆனால் தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்ட அழுத்தம் தாங்காது அரசு தமிழர் தரப்படன் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டபோது திடீரென தம்மையும் ஒருதரப்பாக அழைக்க வேண்டும் என்று கோசமெழுப்பி தமிழ்த் தரப்புக்கும் அரச தரப்புக்கும் இடையே தலையை நுழைக்க எத்தனித்தது. அரசுடனும் அமைச்சரவையில் அங்கம் வகித்த வேளையிலும் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் போதிய அழுத்தம் கொடுத்திருந்தால் கூட அது தமிழர் தரப்பு நியாயமான போரட்டத்துக்கு ஓரளவு உரமாகியிருக்கும். ஆனால் இது தொடர்பாக மூச்சுவிடக்கூட திராணியற்றவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

அன்று இருந்து இன்று வரை முஸ்லீம் அரசியல் கட்சிகளது கொள்கை (முஸ்லீம் மக்களது கொள்கை அல்ல) இழித்த வாய் தமிழன் எப்படியோ எதிர்ப்பு அரசியல் செய்வான். அரசிலோ அமைச்சரவையிலோ அங்கம் வகிக்கும் பதவி ஆசை அவனுக்கோ அவனது சமூகத்துக்கோ இல்லை. போராடி பிரச்சினை தீர்வுக் கட்டத்துக்கு வரும் வேளை தலையையோ மூக்கையோ நுழைக்கலாம் அதுவரை நாம் அரச பங்காளிகளாக இருந்து அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்போம் என்பதாகவே இருந்துள்ளது. இன்னும் இருக்கின்றது.

கிழக்கு மாகாண சனத்தொகை அடிப்படையிலோ, கட்சிசார் அங்கத்துவம் அடிப்படையிலோ தமிழ்த் தேசியப் கூட்டமைப்புக்கு இன்றைய நிலையில் ஆட்சி அமைக்கக் கோரும் தார்மீக உரிமை உண்டு.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போதும் தேர்தல் முடிவடைந்த பின்பும் சம்பந்தன் ஐயா இணக்க அரசியல் செய்வோம் இணைந்து கொள்வோம் என்று பகிரங்கமாக அறைகூவினார். அதை புறந்தள்ளினார்கள். முதலைமைச்சர் பதவியை எவ்வித நிபந்தனையும் இன்றி எடுங்கள் என்றார்.

 புறக்கணித்தார்கள் அமைச்சர் அவையையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் நாம் இணைந்து ஆட்சி அமைப்போம் என்றார். அதையும் கூட உதறித் தள்ளி இரண்டரை வருட ஒப்பந்தம் போட்டு வழக்கமான தமது பாணியை தொடர்ந்தார்கள்.

நாடு கேட்டு ஐந்து ஊர்கேட்டு ஐந்து வீடு கேட்ட பாண்டவர் நிலைக்கு அன்று சம்பந்தன் ஐயா இறங்கி வந்த போது தூக்;கி எறிந்தவர்கள் இன்று காலம் எமக்கு சாதகமாகின்ற போது வழமையான தமது பாணியில் எமது வாய்பை கட்டிப் பறிக்க நினைப்பது தார்மீக அரசியல் நெறிக்கு ஒவ்வாதது என்பதை அவர்கள் உணர வேண்டும்

எப்போதும் எப்பக்கம் சார்ந்ததேனும் எமக்கே அதிகாரமும் பதவியும் வேண்டும் என்ற குறுகிய கால அரசியலை விட்டு கடந்த கால அரசியலை விட்டு கடந்த கால அரசியல் வரலாற்றின் யதார்தங்களை உணர்ந்தும் எதிர்கால சமூக நல்லிணக்கத்தை கருதியும் விட்டுக் கொடுப்பு எத்தரப்பிலிருந்து வரவேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது இக்கருத்தானது எந்த சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல மாறாக இன்னமும் நமது அதிகார ஆசையால் எமது மக்களிடையே ஏற்பட இருக்கும் நல்லிணக்கத்தை தூரத் தொலைத்து விடக் கூடாது என்ற காரணத்துக்காகவே ஆகும். 
SHARE

Author: verified_user

0 Comments: