3 Jan 2015

எபோலாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7890 ஆக அதிகரிப்பு

SHARE
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலா நோய் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,890 ஆக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் முதல் முறையாக ஒருவர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடுகளான சியரா லியோன், லைபீரியா, கினீயா ஆகிய மூன்று நாடுகளில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அளவில், எபோலா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரம்: சியரா லியோனில் 9,446 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 2,758 பேர் உயிரிழந்தனர். லைபீரியாவில் 8,018 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 3,423 பேர் உயிரிழந்தனர். கினீயா நாட்டில் 2,707 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், 1,708 பேர் உயிரிழந்தனர். எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களையும் இந்நோய் தாக்கியுள்ளது. சிகிச்சையில் ஈடுபட்ட 678 சுகாதாரத் துறை ஊழியர் மற்றும் மருத்துவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 382 பேர் உயிரிழந்தனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: