தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வருடக்கணக்கில் தற்காலிக அடிப்படையில்
கடமைபுரியும் ஊழியர்கள் நிரந்தர ஊழியர் என்ற அந்தஸ்த்தை, பிறந்துள்ள
2015ல் பெறவுள்ளதாக இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர்
கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
பிறந்துள்ள 2015ம் ஆண்டை வரவேற்குமுகமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக
ஒலுவில் வளாகத்தில் பதிவாளர் எச்.ஏ.சத்தார் தலைமையில் அரசாங்க சேவை
சத்தியப்பிரமான நிகழ்வும் பால்ச்சோறு உண்டு மகிழும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே உபவேந்தர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகம் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப்
அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 20வருடத்தில் காலடி வைக்கவுள்ள இத்தருணத்தில்
இப்பல்கலைக்கழகம் பாரியளவில் அபிவிருத்திகளை கண்டுள்ளதாகவும்
எதிர்காலத்தில் இன்னும் பல அபிவிருத்திகளை காண பிறந்துள்ள இப்புத்தாண்டில்
பிரார்த்திப்பதாகவும் இலங்கையில் உள்ள உயர் கல்வி நிலையங்களின் தரவரிசையில்
இப்பல்கலைக்கழகம் அடிமட்டத்தில் இருந்ததாகவும் தற்போது அது எட்டாவது
இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும், இவ்வாறான முன்னேற்றத்துக்கு இங்கு
கடமையாற்றும் ஊழியர்களின் பங்களிப்பே காரணம் என்றும், தற்போது அடைந்துள்ள
அடைவு மட்டத்தை இன்னும் முன்னோக்கி எடுத்துச்செல்ல இங்கு கடமையாற்றும்
ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இப்பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணியங்கள்
ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சும் அரசாங்கமும் திருப்தியடைந்துள்ளதாகவும்
தொடர்ந்தும் பல்கலைக்கழகத்தின் உயர்ச்சிக்காக இங்குள்ள ஊழியர்கள் அனைவரும்
உழைப்பதன் ஊடாக இன்னும் பல அபிவிருத்திகாளைப் பெறமுடியும் என்றும்
தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் நிறைவடையும்
இத்தருணத்தில் இவ்வாண்டை மிகக் கோலாகரமாக கொண்டாடவுள்ளதாகவும்
தெரிவித்தார்.
நிகழ்வை பதிவாளர் எச்.ஏ.சத்தார் தலைமை தாங்கிய அதேவேளை பீட்டதிபதிகள்
நிதியாளர் நூலகர் விரிவுரையாளர்கள் நிருவாக உத்தியோகத்தர்கள் கல்விசார
ஊழியர்கள் என பெரும் திரளானோர் பங்கு கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment