17 Dec 2014

'ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், எந்தவொரு முடிவையும் இதுவரையில் மக்களுக்கு அறிவிக்கவில்லை. - கருணாகரம்

SHARE
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித அவசரமும் கொள்ளவில்லை. ஆனால், அரசாங்கத்தில் இருப்போருக்கே யாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கப்போகின்றது என்ற ஆதங்கம் உள்ளதாக  கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, புன்னைச்சோலை முன்பள்ளியின் ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றன. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஜனாதிபதித்  தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள்,  எந்தவொரு முடிவையும் இதுவரையில் மக்களுக்கு அறிவிக்கவில்லை. அதற்கும் காரணம் இருக்கின்றது.

நாங்கள் அவசரப்படவில்லை. ஆனால், எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை  அறிந்துகொள்வதற்கு இந்த அமைச்சரவை அவசரப்படுகின்றது.
எமது தமிழ் மக்கள் அவதிப்பட்டும் அவஸ்தைப்பட்டும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் நடமாடுவதைப்போன்று நடமாடி வருகின்றார்கள். எங்களை இந்த அவதியிலிருந்து மீட்பதற்கு ஓர் இரட்சகன் தேவைப்படுகின்றான்.

எமது பிரதேசத்தில் சிலர் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமது இருப்புகளை தக்கவைப்பதற்காக, ஒருவரை வெல்லவைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றார்கள்.

எமது எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமானால், யார் வெல்லவேண்டும் யார் வெல்லக்கூடாது என்பதில் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.
கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் எவ்வளவு ஆர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்களோ, அதேபோல் இம்முறை எம் மக்களுக்கு யார் தேவையில்லை என்பதை தீர்மானித்து அவருக்கு எதிராக உங்கள் வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.
இன்றிருக்கும் முக்கியமான வேட்பாளர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்' என்றார்(tm)
SHARE

Author: verified_user

0 Comments: