8 Jun 2020

கட்டுரை : இன்று கண்ணகி அம்மன் குளிர்த்தி.

SHARE
(சக்தி) 

கட்டுரை : இன்று கண்ணகி அம்மன் குளிர்த்தி.
இலங்கையில் கண்ணகி வழிபாடு ஒரு தொன்மை வாய்ந்த நம்பிக்கை வெளிப்பாடாகும்.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழ நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டி நாட்டில் வீரக் கற்பரசியாகி, சேர நாட்டிலே பத்தினித் தெய்வம் எனப் போற்றப்படுகின்றது. இலங்கையிலே சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி தெய்யோ என வணங்கப்பட்டு வரப்படுவதோடு, இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் கண்ணகை அம்னுக்கு கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். 

இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியில், மட்டக்களப்பு பகுதியிலேயே (மட்டு - அம்பாறை மாவட்டங்கள்) கண்ணகி வழிபாடு அதிகளவு காணப்படுகிறது. ஆப்பகுதியில் ஏனைய கடவுள்களுக்குரிய ஆலயங்கள் அமைந்துள்ள போதிலும், பல கண்ணகிய்மன் ஆலயங்களும் சிறிப்பிடம் பெறுகின்றன. உடுகுச்சிந்து என்னும் நூலில் மட்டக்களப்பிலுள்ள கண்ணகி கோவில்கள் பற்றி தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அங்கணாமைக் கடவை கண்ணகி கோவில் பற்றியும் சில பாடல்கள் உள்ளன. இந்த நூலின் பாடல் ஒன்றில் “காமனகர் வாழ்குளக் கண்டியுறை மாதே” எனக் கூறப்பட்டிருப்பதால் கண்டியிலுள்ள கண்ணகி கோவிலும் (பத்தினி தெய்யோ கோவில்) மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றிருந்ததென்று தெரியவருகின்றது.

கண்டிக்கும் மட்டக்களப்புக்கும் இடையே பண்டைய காலத்தில் வாணிபத் தொடர்பு இருந்தது. இதனால் இரு இடங்களையும் இணைக்கும் பழைய வீதி ஒன்று இருந்தது. இந்த வீதி மட்டக்களப்பிற்குத் தெற்கே உள்ள காரைதீவுவிலிருந்து, சம்மாந்துறை, வீரமுனை ஆகிய ஊர்களினூடாக கண்டிக்கு சென்றது. எனவே கண்ணகி வழிபாடு கண்டியிலிருந்து வீரமுனை வழியாக வந்து மட்டக்களப்பின் பிற ஊர்களுக்குப் பரவியது எனவும் முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பிலே 25 இற்கும் அதிகமான ஊர்களிலே கண்ணகை அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. வீரமுனை, காரைதீவு, தம்பிலுவில் ஆகிய ஊர்களில் கிடைக்கும் சில சான்றுகளால் கண்ணகி வழிபாடு அங்கிருந்தே மற்ற ஊர்களுக்கும் பரவியிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.  


உடுகுச்சிந்து நூலிலிருந்து ஒரு பாடல்

பட்டிநகர், தம்பிலுவில், காரைநகர், வீரமுனை
பவிசுபெறு கல்முனை, கல்லாறு, மகிழூர்,
எருவில், செட்டிபாளையம், புதுக் குடியிருப்பு, செல்வ
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை,
அட்டதிக்கும் புகழு வந்தாறுமூலை
அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும்
வடிவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனதினில் நினைக்கவினை மாறியோடிடுமே
என்று ஊர்களைப் பட்டியலிட்டுக் கூறுகின்றது.

மட்டக்களப்பு பகுதியில் கண்ணகை அம்மன் கோவில்களில் நடக்கும் திருவிழாவை சடங்கு என்று கூறுவது வழக்கம். வருடந்தோறும் வைகாசி மாத பூரணை நாளுக்கு முந்திய வளர்பிறை காலத்தில் (பூர்வ பட்சம்) விழா நடத்தப்படுகிறது.

மட்டக்களப்பில் கிடைத்த கண்ணகி சிலை ஒன்று லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் (British Museum) காணப்படுவதாக கலாயோகி ஆனந்த குமாரசுவாமி தனது இந்திய, இந்தோனேசிய கலை வரலாறு என்ற நூலில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட அந்த சிலையின் சிறப்பினை வியந்து எழுதியுள்ளார். எனினும் “இச்சிலை, முலை ஒன்றை இழந்த பத்தினியான கண்ணகிக்குரியது அல்ல” என கலைப்புலவர் க.நவரத்தினம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கண்ணகி அம்மனின் கோபத்தினாலேயே வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, மங்கமாரி, கண் நோய், பெருஞ்சுரம் போன்ற சூட்டு நோய்கள் பரவுகின்றன என மட்டக்களப்பு மக்கள் பலர் நம்புகின்றனர். காளி அம்மனின் அம்சமான கண்ணகையின் பரிகலங்கள் (அணுக்கத் தேவதைகள்) எண்மர் உளர் என்றும் அவர்களே இந்த நோய்களுக்குத் தலைவர்கள் என்றும் அங்கு கூறப்படுகிறது.

வழக்குரை காவியம்.

மட்டக்களப்பு கோவில்களில் படிக்கப்படும் கண்ணகி வரலாறு கண்ணகியின் பெயராலோ அல்லது சிலம்பின் பெயராலோ அழைக்கப்படுவதில்லை. வழக்குரை காவியம் அல்லது வழக்குரை என்றே அழைக்கப் படுகிறது. இதில் வரம்பெறு காதை தொடங்கி குளிர்ச்சிக் காதை வரையான பதினொரு காதைகள் உள்ளன. வழக்குரை காவியம் ஏறக்குறைய 2220 பாடல்களைக் கொண்டுள்ளது. 

அவற்றுள் எடுத்துக்காட்டாக ஒன்று

கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்
வானிரங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்காய்த்
தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார்
தானிரங்கு கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமெல்லாம்
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமான வழக்குரை காவியம் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலை சேர்த்து வளர்த்துவரும் பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது.

வழக்குரை காவியத்தில் கூறப்படும் கண்ணகி கதை
சிவபெருமான் பராசர முனிவரின் மகளது அழகினையும் நற்குணங்களையும் கண்டு “நீ பூலோகத்தாரால் தெய்வமாகப் போற்றப்படும் தகைமை உடையவள். ஆதலால், கற்புக்கரசியாக விளங்கவும், மானிடர்கள் உன்னை பத்தினித் தெய்வமாக வணங்கவும் உனக்கு வரம் தந்தோம்” என்று சொன்னார். (சில கிராமிய இலக்கியங்கள் அவள் பெயர் “நாகமங்கலை” என்கின்றன).

அச்சமயம் பார்வதி தேவி, “பாண்டிய மன்னன் தனது தவப்பேற்றினால் பெற்ற நெற்றிக்கண்ணால், தான் ஈசனுக்கு நிகரானவன் என ஆணவம் கொண்டிருக்கிறான். அதை அழிப்பாய் என அவளுக்கு ஆணையிட்டாள். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காக பராசர முனிவரின் மகளுக்கு பாண்டிய நாடு பிறப்பிடமாக கற்பிக்கப்பட்டது.

பாண்டிய நாட்டில் புதுவகையான மாங்கனி ஒன்று காணப்பட்டது. கண்ணுக்குத் தெரிந்த அக்கனி அதனைப் பறிக்க யாரேனும் மரத்தில் ஏறிச்சென்றால் மறைந்துவிடும். பாண்டிய மன்னன் அம்பெய்து அக்கனியை வீழ்த்தினான். ஆனால் அக்கனி நிலத்தில் விழாது அந்தரத்தில் தொங்கியது. அதனைப் பிடிக்க அரசன் கையை நீட்டியபோது அந்தக் கனி நெருப்புக் கோளமாகி அரசன் கைகளில் வீழ்ந்தது. அரசன் பயந்து கனியை நிலத்தில் விட்டெறிந்தான். தன் நெற்றியில் அரும்பிய வியர்வையை தன் கையால் துடைத்தான். மாங்கனியைத் தொட்ட கை நெற்றியில் பட்டதும் நெற்றிக்கண் அழிந்தது.

நிலத்தில் வீழ்ந்த கனியை அரசன் மனைவியிடம் கொடுத்தான்.
அக்கனி தெய்வத்தன்மை பொருந்தியது என அவள் அதனை ஒரு பொற் குடத்தில் இட்டு வைத்தாள்.
மூன்றாம் நாள் பொற்குடத்தை அரசவைக்குக் கொண்டு வந்தபோது மாங்கனி பெண்குழந்தையாக மாறியிருந்தது.
அச்சமயம் அரண்மனைச் சோதிடர்கள் இக்குழந்தை “பீடுறும் மதுரை அரசோடழியக் காரணமாகும்” எனச் சொன்னதால் மன்னன் குழந்தையை அழகிய பேழை ஒன்றில் வைத்து ஆற்றில் விட்டான்.

இக்காலத்தில் சோழ நாட்டில் கரிகால் பெருவளத்தான் ஆட்சி செய்து வந்தான். சோழ நாட்டின் தலை நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்தில் மாசாத்துவான், மாநாய்கன் என்ற இரண்டு வணிகர்கள் வாழ்ந்தனர். மாசாத்துவானுக்கு கோவலன் என்றொரு மகன் இருந்தான். மாநாய்கனுக்கு குழந்தைப்பேறு இல்லாதிருந்தது. இருவரும் ஒரு நாள் கடற்கரையில் நிற்கும்போது குழந்தையுடன் பேழை வருவதைக் கண்டனர். மாநாய்கன் அக்குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டான். தன் வாழ்வில் ஒளியும் மகிழ்ச்சியும் ஏற்றிய காரணத்தால் குழந்தைக்கு கண்ணகை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தான். இதன் பின்னர், வழக்குரை கதை பெருமளவு சிலம்புடன் ஒத்தும், சில இடங்களில் மாறுபட்டும் செல்கிறமையும் அவதானிக்க முடிகின்றது.

கிழக்கில் இம்முறை கண்ணகியம்மன் சடங்கு… 

இலங்கை நாட்டில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணகி வழிபாடு  பிரதானமாக வழிபடப்படுகின்றது. மாவட்டத்தில் கண்ணகிக்கென பல கோயில்கள் பல்வேறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வைகாசி மாதம் பிறந்தாலே கண்ணகி சடங்கின் முணுமுணுப்புக்கள் ஆரம்பித்துவிடும். வருடந்தோறும் இச்சடங்கினை  ஊர் தேசம் கூடி பெருவிழாவாக நடத்துவதற்குரிய திட்டமிடல்கள் பல நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிடும். 

எத்தனை நாட்கள் சடங்கினை செய்வது, சடங்கினை சிறப்பிப்பதற்கு எவ்வகையான அலங்காரங்களை மேற்கொள்வது, ஒவ்வொரு நாட்களும் என்ன? என்ன? நிகழ்வுகளை நடாத்துவதென திட்டமிடப்பட்டு, சடங்கு ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னமே பிரசுரங்களும் வெளியாகிவிடும். இச்சடங்கினை காண்பதற்காக அவ்வூர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எங்கு இருந்தாலும், தத்தமது ஊர்களுக்கு வருகைதந்து சடங்கில் கலந்துகொள்வது வழக்கம். இதனால் நீண்ட நாட்கள் சந்திக்காதவர்களும், இச்சடங்கின் மூலமாக சந்திப்பதும், தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்வதும் நடந்தேறும். சடங்கு ஆரம்பித்தால், அச்சடங்கு முடியும் வரை தத்தமது ஊர்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதையும் தவிர்த்துக்கொள்வதுடன், பல்வேறு சம்பிராதயங்களையும் கடைப்பிடிப்பவும் தமிழர்களின் பண்பாடாக இருந்து வருகிற்றது. 

சிறுவர்கள் தமக்கு விருப்பமான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும். எப்போது சடங்கு நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருப்பர். சிறுசிறு நடமாடும் கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், கடைகளை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வர். சடங்கோடு மட்டும் நின்றுவிடாது, மக்களுக்கு அன்னதானம் கொடுக்கும் வழக்கமும் இடம்பெறும். இவையனைத்தின் மூலமாகவும் பலரும் ஒன்றுசேரும் வாய்ப்பும், வேலைகளை பகிர்ந்து செய்வதும் வழக்கமாகிடும். மேலும் ஆலயத்தில் பாடப்படும் பாடல்கள் கேட்போர் காதுகளில் தேனைப் பாய்ச்சுவதுபோல் அமையும். பொதுவாக் ஊரே செழிப்புற்றிருக்கும். வண்ணவடிவ மின்குமிழ்கள் ஒளிரும் காட்சியும் கண்ணுக்கு விருந்தளிக்கும். காலை நிகழ்வுகள் மூலமாக பலரின் திறமைகள் வெளிவரும். இவ்வாறாக பலரையும் ஒன்று சேர்த்து  கோலாகலமாக நடைபெறும் கண்ணகியம்மன் சடங்கு, தற்போதைய நாட்டின் அசாதாரண சூழலினால் மிக அமைதியாக நடைபெறுகின்றது. 

நிகழ்வுகள் இல்லை, கடைகள் இல்லை, மக்கள் கூட்டம் இல்லை, அலங்காரம் மிகக்குறைவு, மின்குமிழ்களும் மிகக்குறைவு, பட்டாசு சத்தம் இல்லை. ஆனால் சடங்கு ஊர்மக்களின் காவலுக்காக தற்கால சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்தேறுகின்றமை வரலாற்றில் முதல் தடவை என்றே கூறலாம். இருந்தபோதிலும், தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள நோய் தீரவும், பஞ்சம், வறுமை நீங்கி மக்கள் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என கலந்துகொண்ட சொற்ப பக்கதர்கள் வழிபாடு செய்தனர். இவ்வாறு நடைபெற்ற இவ்வருடத்திற்கான கண்ணகியம்மன் சடங்கு வைக்காசி மாதம் திங்கட்கிழமை (08.06.2020) இன்று குளுர்த்தியுடன் நிறைவு பெறுகின்றது. 
    


SHARE

Author: verified_user

0 Comments: