இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தம் 212 படங்கள் வெளியாகி சாதனை
படைத்துள்ளது. இவை அனைத்துமே நேரடித் தமிழ் படங்களாகும். டப்பிங் படங்கள்
வேறகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.
1931ம் ஆண்டு ஆரம்பமான தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 200 படங்கள்
வெளிவருவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு 150க்கும் கொஞ்சம் அதிகமான
படங்களே வெளிவந்தது. 2012ல் 130க்கும் மேற்பட்ட படங்களும், 2011ல்
125க்கும் மேற்பட்ட படங்களும் வெளிவந்தது.
இதனால் மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வெளியான படங்களும்
அதிகம், வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒரு வாரத்துக்கு
சராசரியாக நான்கு படங்களுக்கும் மேல் வெளியானதால் வெளியிட போதிய அரங்குகள்
கிடைக்காமல் பட அதிபர்களும், பார்க்க முடியாமல் ரசிகர்களும் கொஞ்சம்
திண்டாடித்தான் போனார்கள்.
இதனால் சரியாகத் திட்டமிட்டு படங்களை வெளியிட்டால் 2015-ல் இந்த
வெற்றியின் விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த 212
படங்களில் எத்தனைப் படங்கள் வெற்றிப்பெற்றன.. எத்தனைப் படங்கள் குறைந்த
பட்ச லாபத்தோடு தப்பித்தன என்று பார்த்தால்,
பெருமைப்பட்டுக்கொள்ளும்படி
பெரிதாக இல்லை என்பதுதான் உண்மை.
சரி இந்தாண்டு முதல் பெரிய வெற்றியைப் பெற்ற படம் எது வென்று
தெரியுமா..? எந்த விளம்பரமும் இல்லாமல், நான்கே நான்கு சிறுவர்களை மட்டும்
வைத்துக்கொண்டு விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடாதான். இப்படம் தான் போட்ட
வசூலைவிட பல மடங்கு அதிகமான வசூலை குவித்தது.
அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்களுடன் வெளியானது
நடுத்தர பட்ஜெட் படமான கோலி சோடா. ஆனால் வீரமும் ஜில்லாவும் பெறாத வெற்றியை
இந்தப் படம் பெற்று, 2014-ம் ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப்
பெற்றது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் 25 படங்களுக்கு மேல் வெற்றி
பெற்றன மற்றும் தப்பித்துவிட்டன எனலாம்.
குக்கூ, மான் கராத்தே, யாமிருக்க பயமே, என்னமோ நடக்குது, தெகிடி, நான்
சிகப்பு மனிதன், வல்லினம், மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, அரிமா நம்பி,
சதுரங்க வேட்டை, வேலையில்லா பட்டதாரி, ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம்
இயக்கம், சலீம், அரண்மனை, ஜீவா, மெட்ராஸ், கத்தி, பூஜை, திருடன் போலீஸ்,
நாய்கள் ஜாக்கிரதை, லிங்கா, பிசாசு, வெள்ளக்கார துரை போன்ற படங்களை இந்தப்
பட்டியலில் சேர்க்கலாம்.
இந்திய சினிமாவின் முதல் 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படமான
ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய ஆரம்ப வசூலை தமிழகத்தில் பெற்றது. முதல்
வாரத்தில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் ஈட்டினாலும்,
தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் படம் தோல்வியைத் தழுவியது. அந்தப்
படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்பதை ரஜினியும் மேடையிலேயே
அறிவித்துவிட்டார்.
பல லட்சம் பேருக்கு வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கி வரும்
தமிழ்த் திரையுலகம் திருட்டு விசிடி, டிக்கட் கட்டண உயர்வு உள்ளிட்ட பல
பிரச்சனைகளால் தடுமாறிக் கொண்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. அவற்றை
2015ம் ஆண்டிலாவது தீர்த்து வைத்தால்தான் இனி வரும் காலங்களிலும் தமிழ்த்
திரையுலகம் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
0 Comments:
Post a Comment