'நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல முயற்சிப்பவர்களுக்கு எதிராக
இளைஞர்களும் யுவதிகளும் அணிதிரள வேண்டும்' என ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் படையணியை புனரமைக்கும் நோக்கில்
அம்பாறையில் புதன்கிழமை(12) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஒரு கட்சியின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. அங்கு
அவர்களுக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும். பதவிக்கு வரும் வரை மட்டும்
அவர்களது தயவை பெற்று பின்னர் நட்டாற்றில் கைவிடும் கொள்கை அரசியல்
கலாசாரம் ஆகாது.
நாளைய தலைவர்களாகிய இன்றைய இளைஞர்களை பக்குவமாக வழிநடத்த வேண்டும். அவ்வாறு
இல்லாத பட்சத்தில் கடந்த காலங்களில் வடக்கிலும், தெற்கிலும்
கிளர்ந்தெழுந்த இளைஞர் அமைதியின்மை மீண்டும் தலையெடுப்பது தவிர்க்க
முடியாததாகிவிடும்.
இளைஞர்களின் ஆசை, அபிலாஷை உணர்வுகளை உணர்ந்து செயல்பட்டால் மாத்திரமே மீட்டெடுத்த சமாதானத்தை நிரந்தரமாக்கி கொள்ள முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இளைஞர் சமூதாயத்தை மதிக்கும் ஒரு கட்சி.
அவர்களது உரிமைகளை கட்டிக்காக்கும் ஒரு கட்சி. ஆட்சிக்கு வரும் வரை ஏமாற்றி
ஆட்சியை அமைத்த பின் இளைஞர்களை உதறித்தள்ளும் குணம் இந்தக் கட்சியிடம்
கிடையாது.
இளைஞர்களுக்கு பூரண அரசியல் சுதந்திரம் உள்ளது. அதனை சரியான வழியில்
பிரயோகித்து சரியான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதனையே எதிர்பார்க்கின்றது.
இளைஞர்களை தலைவர்களாகக் காணவே விரும்புகின்றது. அதற்கு இன்றைய இளைஞர் சமூதாயம் சகல பேதங்களையும் மறந்து ஒன்றிணைய வேண்டும்.
இன்று நாட்டை அபிவிருத்தி செய்கின்ற ஒரு கட்சியை மக்கள் சரியாக தெரிவு
செய்ய வேண்டும். தெரிவு பிழையாக இருந்தால் நமது நாட்டின் முன்பிருந்த
பயங்கரவாதம் தலைதூக்கிவிடும்.
எனவே, நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்பார்க்கின்றோம். நீலப்படையணியை
வலுப்படுத்துவதற்கு இளைஞர்களுடைய ஆதரவு எமக்கு மிகவும் முக்கியமானதாகும்'
என்றார்.
'ஜனாதிபதிக்கு வாக்களித்தால் சாரதியாக மாறுவேன்”
இதேவேளை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர்
சீ.மு.இராசமாணிக்கம் சாணக்கியன்,
'தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தால் நான் எனது சொந்த வாகனத்தை
விற்று பஸ் வண்டியை வாங்கி, அதன் சாரதியாக மாறுவேன். என்னிடம் வரும்
தமிழ் மக்கள் அனைவரையும் பஸ்ஸில் ஏற்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பு
உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று கேள்விகள் கேட்பேன்' என்றார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'சரத் பொன்சேகாவை வாழ்க்கையில் கண்டிறாதவர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்
போது சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள். அவருக்கு வாக்களித்தவர்கள்
இன்று எம்மிடம் வந்த அபிவிருத்தி கோரி நிற்கின்றனர். இந்த நிலைமையை மாற்றி
ஜனாதிபதிக்கு வாக்களித்தால் நாம் உரிமையுடன் உதவிகளை கேட்கமுடியும்.
ஒருவருக்கு வாக்ளித்து விட்டு மற்றொருவரிடம் உதவிகளை கோருவது என்பது முறையல்ல.
நாம் பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் படையணியை புனரமைக்கும் நோக்கில்
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், பாணம, திருக்கோவில், இறக்காமம்,
உகன உள்ளிட்ட பிரதேசங்களில் சந்திப்புக்கள் இடம்பெற்றன. இதன்போது நாளை
இளைஞர் அமைப்பின் புதிய அங்கத்தவர்களை இணைத்துகொள்ளப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment