13 Nov 2014

தமிழர்களின் பாதுகாப்பில் தடுப்புச்சுவராக இருக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,

SHARE
தமிழர்களின் பாதுகாப்பில் தடுப்புச்சுவராக இருக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் பாதுகாப்பில் ஓலை வேலியாகவும் இருக்கவில்லை என்பதே உண்மை என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற  கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத் திறப்பு விழாவில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு   அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தடுப்புச்சுவர்களாக தாங்கள் உள்ளோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை விடுத்து வேறு எந்த விடயத்தை மக்களின் முன்னேற்றத்துக்காக செய்திருக்கின்றார்கள் என்று பார்த்தால், அங்கு கிடைக்கும் விடை பூச்சியமாகவே  இருக்கும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள் முல்லிவாய்க்காலில் உயிர்நீத்த சகோதரர்களுக்காக அஞ்சலி செலுத்த நினைப்பவர்கள் அன்னத்துக்கு வாக்களியுங்கள் என்று.  முல்லிவாய்க்கால் யுத்தத்தின்போது இராணுவத்தளபதியாக இருந்தவருக்கே வாக்களிக்கச் சொன்னார்கள். இவ்வாறே தமிழ் மக்களை அவர்கள் தடுப்புச்சுவர் போல் பாதுகாத்தனர்.

கிழக்கு  மாகாணசபை அமைக்கப்பட்டு முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தபோது, எங்களை ஒட்டுண்ணி என்று சொன்னார்கள்.  வடக்குக்கான மாகாணசபை தேர்தல் நடைபெற்றதன் பின்னர் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தபோது இராஜதந்திரம் என்று கூறினார்கள். கிழக்கில் உள்ளவர்கள் செய்தால் தவறு. அவர்கள் செய்தால் இராஜதந்திரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னால்; இன்றுவரை எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்கவுமில்லை. அதற்காக சிபார்சு செய்யவும் இல்லை. ஏனெனில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து போதைப்பொருள் பாவனை ஒழிக்கப்பட வேண்டும் என்று பாடுபடுபவர்களில் நானும் ஒருவன். ஆனால், சமுகத்துக்காக குரல் கொடுக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் தற்போது இருப்பவர்களுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அதிகமான மதுபானச்சாலைகளுக்கான அனுமதியை வழங்குவதற்கு உதவியவர்கள்.  இதனை சம்மந்தப்பட்டவர்கள் மறுக்கமுடியாது.

மக்கள் சகல விடயங்களிலிருந்தும் தெளிவு பெறவேண்டும். உரிமையை கதைக்கின்றார்கள் என்றால், என்ன உரிமையைப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள்?  எமக்கு உரிமையும் வேண்டும். அபிவிருத்தியும் வேண்டும். இரண்டும் ஒன்றாக கிடைத்தாலே ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும்' என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: