27 Nov 2014

சம்பூர் மக்கள் தற்போது பெய்கின்ற மழையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

SHARE
பட்டித்திடல், மணற்சேனை, கிளிவெட்டி ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சம்பூர் மக்கள்;,  தற்போது பெய்கின்ற மழையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

மழைநீர் வழிந்தோட முடியாதவாறும் சேறும் சகதியாகவும் அவர்களின் நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள  பகுதிகளும்; நடைபாதைகளும்  காணப்படுகின்றன. இதனால்,  இந்த  மக்கள் குறிப்பாக, குழந்தைகள் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளை உடனடியாக கவனித்து நலன்புரி நிலையங்களையும்  சூழலையும் சுத்தமாக பேணுவதற்குரிய நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே, இந்தப் பிரச்சினை ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றது.  இந்த மக்களுக்கு மாற்றிடங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கும்போது, அது பலனளிப்பதில்லை. ஆகவே, இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர்கள்  உதவவேண்டுமெனக் கூறினார்.

இந்த நிலையில், சி.தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்  கு.நாகேஸ்வரன் தெரிவிக்கையில்,

தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு இப்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சம்பூர் அகதிகளை, அவர்களின் சொந்தக்காணிகளுக்கு செல்ல அரசாங்கம் அனுமதித்தால், அது நன்மை அளிப்பதாக இருக்கும்.  சொந்தக்காணிகளில்  அவர்களுக்கு வாழ்வாதாரத்தை தேடவும்; முடியும்.

அனல்மின் நிலையத்துக்கும்  கைத்தொழில் அபிவிருத்தி வலயத்துக்கும்  தேவைப்பட்ட காணிகள், சம்பூரில் அரசினால் இனங்காணப்பட்டுள்ளன. அபிவிருத்திக்காக இந்தக் காணிகள் தேவைப்படின், அதற்கு நாம் தடையாக இருக்கவில்லை. அந்தக் காணிகள் போக, மிகுதிக் காணிகளையாவது இந்த மக்களுக்கு மீள அளிக்கவேண்டியது  நியாயம். இதனைச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசரமானதாகும்'  எனக் கூறினர்.         
SHARE

Author: verified_user

0 Comments: