27 Nov 2014

'பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, சொந்த சுயநலத்துக்காக மைத்திரிபால சிறிசேனா அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார் - ஹிஸ்புல்லாஹ்

SHARE
இறைவனைத் தவிர, வேறு எந்த சக்தியாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கமுடியாது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய திவிநெகும பிரதேச உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, காத்தான்குடியிலுள்ள பிரதியமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,   

'பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, சொந்த சுயநலத்துக்காக   மைத்திரிபால சிறிசேனா அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக வெற்றியடையப் போகின்றார்.  அவரை இறைவனைத் தவிர, வேறு எந்த சக்தியாலும் தோற்கடிக்கமுடியாது என்ற விடயத்தில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். ஜனாதிபதியாக இருப்பதற்கு  மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன.

தனது பதவிக்காலத்தின் இரண்டு வருடங்களுக்கு முன்னரே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு போகின்றார் என்றால், அவர் தோல்வியடைவதற்கு போகவில்லை.

இவர்கள் கட்சி மாறுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியும். இன்னும் நான்கு, ஐந்து பேர் கட்சி மாறுவார்கள் என்றும் அவருக்கு தெரியும். கட்சி மாறியவர்கள் மட்டுமல்ல, இன்னும் ஆறு பேர் அல்லது ஏழு பேர் கட்சியை விட்டுப் போவார்கள்.

இவர்கள் எல்லாம் கட்சி மாறுவார்கள் என்று தெரியாமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கு கையொப்பம் இடவில்லை. 

மைத்திரிபால சிறிசேன கடந்த ஆறு, ஏழு மாதங்களாக இதற்காக பேச்சுவார்த்தை நடத்துகின்றார் என்பதும் அவர் கட்சி தாவப்போகின்றார் என்றும் தெரியும்.
இவைகளை தெரிந்துகொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு போயுள்ளார்.
கடந்த நான்கு, ஐந்தாண்டுகளில் இந்த நாடு பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. 

மட்டக்களப்பை எடுத்துப் பாருங்கள்.  இந்த மாவட்டம் எப்படி முன்னேறியுள்ளதை பார்க்கமுடியும். இன்னும் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் ஆட்சியை கவிழ்த்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் எதையுமே எங்களால் செய்யமுடியாது.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைவரினதும் கடமையாகும்' என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: