6 Nov 2014

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் இருந்தால், தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தி அடையும்

SHARE


அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் இருந்தால், தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தி அடையும்  என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

செங்கலடியில் பல வருடங்களாக கவனிப்பாரற்றுக் கிடந்த வீதிகளை செப்பணிடும் பணி இன்று வியாழக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தி குறைந்த நிலையிலிருப்பதற்கு இந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய அரசாங்கக் கட்சிகளின் பிரதிநிதிகள் இல்லாதிருப்பதே காரணமாகும். இந்தப் பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய தேவையைக்கூட எம்மால் நிவர்த்தி செய்ய முடியாமல் போனமைக்கு இதுவே காரணம்.

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய அரசாங்கக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், இந்தப் பகுதியில் இருப்பார்களாயின், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்துதர வழிவகைகள் இருக்கும்.

இந்த மாவட்டத்திலிருந்து நீங்கள் தெரிவுசெய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உண்மையில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வருவார்களாயின், நீங்கள் அனுபவிக்கும் எத்தனையோ பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க வழியேற்படும்.

உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்று கருதியே உங்களின் பிரதிநிதிகளாக  அவர்களை, நீங்கள் நாடாளுமன்றத்ததுக்கு அனுப்பியுள்ளீர்கள். ஆனால், அவர்கள் எதிர்ப்புறத்தில் அமர்ந்து எந்நேரமும் அரசாங்கத்தை திட்டித்தீர்ப்பதால்; எதுவும் நடக்கப்போவதில்லை.
சும்மா இருந்துகொண்டு அரசாங்கத்தை திட்டுங்கள் என்று கூறி நீங்கள் அவர்களை உங்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. ஆனால், அவர்கள் ஒருபோதும் உங்கள் தேவைகளை பற்றிக் கதைக்காமல், அரசாங்கத்தை திட்டித்தீர்ப்பதிலேயே காலங்கழிக்கிறார்கள்.

இது இன்று, நேற்று தொடங்கிய அரசிய அல்ல. காலங்காலமாக இதுவே நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இது பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டும்.
அரசாங்கத்திடமிருந்து கிடைக்கக்கூடிய சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொள்வதில் அவர்கள் அக்கறை காட்டவேண்டும். அப்படியானவர்களை நீங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.' என்றார்.(TM)
SHARE

Author: verified_user

0 Comments: