6 Nov 2014

மேய்ச்சல் தரை விவகாரம் சம்மந்தமான நிலைப்பாடு தொடர்பில் கருத்து

SHARE

 மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை விடயம் தொடர்பில் தமிழர் சிங்களவர் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்காமல் எல்லோரும் இலங்கையர் என்ற ரீதியில் கால்நடை வளர்ப்பாளர்களுக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வனபரிபாலன உயர் அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகி துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மேய்ச்சல் தரை விவகாரம் சம்மந்தமான நிலைப்பாடு தொடர்பில் அவர் மேலும்; கருத்துத்  தெரிவிக்கையில்

'மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பாரம்பரிய மேய்ச்சல் தரைகளான மாதவணைஇ மயிலத்தமடு பிரதேசங்களில் அம்பாறையிலிருந்து அத்துமீறி பிரவேசித்து அனுமதியின்றி விவசாயம் செய்வோரால் இப்பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட வனபரிபாலன திணைக்களம்மாவட்ட செயலகம் குறித்த பிரதேச செயலகங்கள் என்பன எடுக்கும் நடவடிக்கைகள் உயர்மட்டங்களால் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு தலையீடுகளின் காரணமாக முற்கொண்டு செயற்பட முடியாமல் தடுக்கப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பாக கடந்த 2014.11.05ஆம் திகதி வன பரிபாலன அதிபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியபோதுஇ குறித்த மேய்ச்சல் தரையானது பாரம்பரியமானது. இதனை சட்டபூர்வமாக பிரகடனப்படுத்துவது தொடர்பாக இவ்வாண்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாதபோதுஇ கால்நடை வளர்ப்போர் இப்பிரதேசத்தினை தொடர்ந்தும் பாவனைக்கு வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இவ்வாறு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த அத்துமீறுவோரால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு கால்நடைகளை வளர்ப்போரும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த விடயத்தினை தமிழர் சிங்களவர் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கமால் எல்லோரும் இலங்கையர். அவர்கள் தமது சட்ட வரம்பிற்கு உட்பட்ட வகையில் உரிமைகள் உள்ளவர்கள் என்ற வகையில் மனிதாபிமானத்தோடு நோக்கப்பட வேண்டும்.

அத்துமீறி விவசாயம் செய்யும் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு அந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கான காணி கொடுக்கப்படுவதன் மூலம் இவ்வாறான அத்துமீறுகையைத் தடுக்க முடியும். இதனை மேற்கொள்வதற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினரும் அக்கறையுள்ள அரசியல்வாதிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

தங்களை பொறுத்தமட்டில் வனபரிபாலன உயர் அதிகாரி என்ற ரீதியில் கால்நடைகளை வளர்ப்போருக்கு அவர்களுடைய மேய்ச்சல் தரைகளை பயன்படுத்துவதற்கு இடையூறு இல்லாத வகையில் அனுமதி வழங்க முடியும். அத்துடன் சட்டத்தினை நிலைநிறுத்தும் வகையில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தேன்.

அதற்கு வன பரிபாலன அதிபர் இது தொடர்பாக மாவட்ட வன பரிபாலன அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல்கள் வழங்குவேன் என்று வாக்குறுதியளித்திருக்கின்றார் என்றும் இந்த விடயம் தொடர்பிலான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்'  எனக் கூறினார். (TM)
SHARE

Author: verified_user

0 Comments: