6 Nov 2014

தொலைக்காட்சி நாடகங்கள் மாணவர்களது கல்வியை வீணடிக்கின்றது இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் பெற்றோர்கள் - மகேந்திரகுமார்

SHARE
துசா -

தொலைக்காட்சி நாடகங்கள் மாணவர்களது கல்வியை வீணடிக்கின்றது, இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் பெற்றோர்கள் என மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளிவந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நகழ்வு நேற்று திங்கட்கிழமை (03) வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலய அதிபர் சு.அரசரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந்நகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மாணவர்கள் அனைவரும் திறமையானவர்கள் அவர்களை உயர்நிலைக்கு கொண்டுவருவது அனைவரதும் கடமையாகும்.

தற்போது அநேகமானவர்கள மாணவர்கள் உட்பட தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தால் அதில் ஒளிபரப்பாகும், நாடகங்களைத்தான் பார்க்கின்றனர். இதற்கு சான்றாக ஒரு பாடசாலையை தரிசிப்பதற்காக நாம் அண்மையில் சென்றிருந்த போது ஒரு மணவரிடம்  தொலைக்காட்சியில் என்ன என்ன அலைவரிசைகள் இருக்கின்றது என்ற கேட்ட போது அனைத்து இலங்கை தமிழ் அலைவரிசையும் கூறிவிட்டு தொலைக் காட்சியில் என்ன என்ன நாடகம் எத்தனை மணிக்கு இடம் பெறுகின்றது என்ற கேட்ட போது ஒன்றையும் விடாது ஒழுங்குமுறைப்படி கூறினான்.
இதற்கு காரணம் பெற்றோர் மாலை 06.00மணிக்கு தொலைக்காட்சியை திறந்தால் இரவு 10 அல்லது 11மணி வரையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதனையே பிள்ளையும் செய்கின்றார்கள். இதனால் பிள்ளைக்கு கல்வியின்பால் கொண்டுள்ள பற்று குறைகின்றது. நாடகத்தின்பால் பற்றுகூடுகின்றது. தொலைக் காட்சி நாடகங்கள் மாணவர்களை வீணடிக்கின்றது. இதன் விளைவு பரீட்சைகளில் தெரிகின்றது. அவற்றை விட்டு. விட்டு கல்விக்காக மாணவர்களை ஈடுபடுத்தி சிறந்த கல்விமான்களை உருவாக்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வேண்டும்.
பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்க ஆயத்தமாக இருக்கின்றார்கள், பாடசாலைகளும் ஒன்றுக்கொன்று போட்டி ஈடுவதற்கு தயாராகிவிட்டது. ஆகவே மாணவர்களும் போட்டியிட வேண்டியவர்களாக உள்ளனர். இதற்காக பிள்ளைகளை தயார்படுத்துவதற்கு பெற்றோர்கள் அக்கறை காட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன் போது புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவருக்கு,  2000 ரூபாயும், வெட்டுப் புள்ளிக்கு குறைவாகப் பெற்ற ஏனைய 10 மாணவர்களுக்கும் ரூபா 1000 வீதமும் வங்கிப் புத்தகத்தில் இட்டு வங்கிக் கணக்கு புத்தகம் வித்தியாலய அதிபரினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதன்போது முதலைக்குடா கிராம உதவும் கரங்கள் அமைப்பினால் இந்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதோடு. அவர்களைக் கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்களால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப் பட்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய, பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஞா.சிறிநேசன், எஸ்.மகேந்திரகுமார், கே.கரிகரராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவனத்தின் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜ், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் சு.மாணிக்கப்போடி, ஆரம்பக்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பே.குமாரலிங்கம், மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மக்கள் வங்கி முகாமையாளர் இ.மோகனதாஸ், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: