28 Nov 2014

அபிவிருத்தியில் தமிழர்கள் அரிச்சுவடி நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பம். வீரபத்திர்ர் சனசமூக நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வி.கே.ஜெகன்)

SHARE
மீண்டும் ஒருவர் அதிகாரத்திற்கு வருவாரானால் எமது மக்களுக்கான தேவைகளை அவரிடம் நாங்கள் அரிச்சுவடியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுவோம். ஆனால் இருப்பவரே தொடர்ந்தும் பதவியில் இருந்தால் எமது அபிவிருத்திகளையும் தேவைகளையும் தற்போது இருக்கும் நிலையிலிருந்தே மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் – என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி கரம்பகம் வீரபத்திரர் சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (28.11.2014) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டுவைத்து உரையாற்றும்போதே   ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்

கடந்தகால அழிவுகளிலிருந்து மீண்டும் எதிர்காலத்தற்கான பாதையைத் திறக்க மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது அபிவிருத்தியின் ஒரு அங்கமாகவே இந்த சனசமூக நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெறுகின்றது.

தற்போது எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருக்கின்றனர். இந்தக் காலத்தில் தான் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது. மக்களது தேவைகளை பெற்றுக் கொள்ள மக்களுக்கு சேவை செய்யும் பிரதிநிதியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த வகையில் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்கள் வரலாம். ஆனால் இணக்க அரசியலை மேற்கொண்டு மக்களுக்கான தேவைகளை பெற்றுத்தர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றும் உங்களோடுதான் இருப்பார்.

இதனூடாகத்தான் எமது அபிவிருத்திக்கான பலமும் அதிகரிக்கும். இதனால் தான் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என எமது கட்சி விரும்புகின்றது.

எனவே வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலை எமது மக்களின் நலனுக்காக சிந்தித்து செயற்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது பின்னால் அனைவரும் அணிதிரளவேண்டும் என்பதே எமது விருப்பு என்றார்.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகனுடன் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ், மெடிஸ்கோ, கரம்பைக்குறிச்சி கிராமசேவையாளர் ஞானசேந்தன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் அப்பகுதி முக்கியஸ்தர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: