13 Nov 2014

27 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக 27 கறவைப்பசுக்கள்

SHARE
ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள  27 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக 27 கறவைப்பசுக்களும் கன்றுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதீதென்ன பகுதியில்  இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அதிகளவில் பால் கறக்கக்கூடிய  இந்தக் கறவைப்பசுக்களும் கன்றுகளும் சுமார்  70,000 ரூபாய் பெறுமதியாகும். மேலும், பசுக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு  கொட்டில்கள் அமைப்பதற்கான உபகரணங்களும்; வளர்ப்பாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டதாக ஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான அதிகாரி ஏ.சி.பைஸர்கான்,

'யுத்தம் இடம்பெற்றபோது பண்ணை வளர்ப்பாளர்கள் பெரும் இழப்புக்களைச் சந்தித்திருந்தனர். மேய்ச்சல்தரைக்குச் சென்று கால்நடைகளாலும் கால்நடை மேய்ப்பாளர்களாலும் உயிருடன் திரும்பிவர முடியாத சூழ்நிலை இருந்தது.

இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. கால்நடைகளும் உயிருடன்  திரும்புகின்றன. கால்நடை வளர்ப்பாளர்களும் சுமுமாக வீடு திரும்புகின்றனர். இந்த சுமுக நிலைமையை  வாய்ப்பாக பயன்படுத்தி துரிதமாக முன்னேறுவதற்கு வறுமையாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இரவு, பகலாகச் சிந்திக்க வேண்டும். வறிய மக்களிடம்  ஏற்படுகின்ற தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியையே நாடு எதிர்பார்க்கின்றது.

அதேபோல, முஸ்லிம் எய்ட் நிறுவனமும் இன, மத பேதங்களுக்கு அப்பால் நின்று தனது  வாழ்வாதார மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

பண்ணை வளர்ப்பாளர்ளுக்கு  நாங்கள்  கறவைப்பசுக்களை  மாத்திரம் கொடுக்கவில்லை. பயிற்சிகளையும் வேறு பல  தேவைகளையும்  சந்தை வாய்ப்புக்களையும் மற்றும் பல்வேறுபட்ட தொடர்பாடல்களையும் ஏற்படுத்தித் தந்துள்ளோம்.

யுத்தம் முடிந்து பல வருடங்கள் சென்றுவிட்டபோதிலும், இன்னமும் நாங்கள் வறுமையில் உழல்கின்றோம் என்பதை பேசிக்கொண்டிராமல், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களும் தேடித்  தருகின்ற வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை நல்ல  முறையில் பயன்படுத்தி நிலைக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்திக்காக இரவு, பகலாக உழைக்க  வேண்டும். சதாகாலமும் ஒரு தரப்பாருக்கே பாதிப்பைக் காரணம் காட்டி அரசோ, அரசசார்பற்ற நிறுவனங்களோ உதவிக்கொண்டிருக்கப்போவதில்லை.

எனவே, கிடைக்கும் உதவிகளை நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்தி முன்னேறுவதோடு உங்களது  கிராமத்திலுள்ள ஏனையவருக்கும் நீங்கள் உதவ வேண்டும்.' என்றார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றியாஸ், கால்நடை வைத்தியர் அபேயகோன் முதியான்சலாகே துலிப் நிஸாந்த,  பொருளாதார  அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  எம்.எம்.சுபைர், முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி, சிரேஷ்ட திட்ட அதிகாரி பைஷர் தாஸிம், வாழ்வாதார திட்ட உத்தியோகஸ்தர் ஏ.நுஷ்ரத் அலி,  பயனாளிகள் கலந்து கொண்டனர். 

SHARE

Author: verified_user

0 Comments: