1 Mar 2014

கிழக்கு தமிழர்களின் உண்மைத் துரோகிகள் யார் என்பதை தமிழ் சமுகம் இன்று நன்கு உணர்ந்திருக்கும் பூ.பிரசாந்தன்

SHARE

கிழக்கு மாகாணத்தில் இன்று என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது நில, நிருவாக, பொருளாதாரங்கள், அபிவிருத்தி, நிதிஇ வேலை வாய்ப்புக்களில் தமிழர்களின் வீதாசாரம் எங்கே சென்றுகொண்டிருக்கின்றது?

2008ஃ2012ம் வருடம் வரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் அரசுடன் இணைந்து ஆட்சி நடத்திய போது இதில் தமிழரோ, முஸ்லிமோ, சிங்களவரோ எந்தப் பாதிப்பினையும் எதிர்நோக்கவில்லை. வீதாசாரக் கட்டமைப்பு எந்தப் பக்கமும் சார்புறாமல் நிலைமையாகப் பேணப்பட்டது. என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்று நிலைமாறிவிட்டது. 

என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
மட்.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பாடசாலை அதிபர் நரேந்திரன் தலைமையில் கடந்த செவ்வாய் கிழமை (25) நடைபெற்றது. இதில் முன்னாள் கிழக்கின் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இந் நிகழ்வில் மட்டக்களப்பு கல்லி வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு பூ.பிரசாந்தன் தெடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்

எல்லா வற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகின்றார்கள் என்று தமிழ் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். மாகாண சபைக்குச் சென்றால் அங்கும் நிலைமை அப்படித்தான்.

வடக்கு மாகாண சபை தான் இலங்கை தமிழருக்கான மாகாண சபை போன்று வெளிக்காட்டப்பட்டது. வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வந்துள்ளார். அவர் வடக்கைப் பார்த்து கொள்வார். வடக்கு நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு. யார் விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு மாகாணத்தினை 2008ம் வருடம் பொறுப்பேற்ற முதல்வர் சி.சந்திரகாந்தன் மாகாண சபை ஆட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என வழிநடத்திக் காட்டினார். 

அன்று மாகாண சபை முறைமை வேண்டாம் என்றவர்கள் 2012ம் வருடம் கிழக்கு தமிழருக்காக எஞ்சியிருந்த மாகாண சபை ஆட்சியினையும் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ள போதும் இன்று மாகாண சபையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து அறிக்கைகளை மாத்திரம் விட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை ஆட்சியை நடத்தி நிதி ஒதுக்கீடுகளையும், நிருவாகங்களையும் நடத்திய தமிழர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்து யாரோ பங்கிட பொழுதைக் கழித்துக் கொண்டு தமிழர்களை நில, நிருவாக, வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு, இடமாற்றம், பொருளாதாரம் என எல்லாவற்றிற்கும் கையேந்தி அலையும் நிலையை தோற்றுவித்தவர்களே இவர்கள் தான். உண்மையான கிழக்குத் தமிழரின் துரோகிகள்.

கிழக்குத் தமிழர்களின் எதிர்காலம் சூனியமாகப் போகின்றது. மாகாண சபை அதிகாரம் எம் கையை விட்டுச் சென்றால் அரசியல் அனாதைகளாவோம் என எத்தனையோ முறை பல புத்திஜீவிகள் கோரிய போதும் தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடந்து கொண்டதன் விளைவு தமிழ் மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. உண்மைக்கும் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுத்த கிழக்குத் தமிழர்களை துரோகிககள் என்றார்களே ஆனால் உண்மையான  துரோகிகள் யார் என்று இன்று கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

நாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளை முன்வைக்கின்றார்கள். தனிப்பட்ட மனிதர்கள் வீடு, மலசலகூடம், குடிநீர், கிணறுகள் என பல்வேறு தேவைகளையும், பாடசாலைகள் பல்வேறு பௌதீகவளத் தேவைகளையும், ஆளணித் தேவைகளையும் முன்வைக்கின்றனர். இவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோசங்களால் தீர்த்துவைக்க முடியமா? முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரிந்தும் அதை வெளியே சொல்லமாட்டார்கள். இதனை இன்று கிழக்கு மாகாண மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். அதிலும் அதிகாரிகள் கிழக்கு மாகாண சபை தமிழரின் கையை விட்டுச் சென்றதன் தாக்கங்களை புரிந்திருப்பார்கள். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: