20 Feb 2014

மட்டக்களப்பு-முறுக்கன்தீவு கிராம மக்களின் அவல நிலை ஒரு பார்வை.

SHARE
  (கங்கா)  

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பூலாக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமம்தான் முறுக்கன்தீவு ஆகும். இந்தக் கிராமத்திற்கு வாழைச்சேனை கிண்ணையடியில் உள்ள வாவி ஒன்றைக் கடந்தே செல்ல வேண்டும். மட்.வாளைச்சேனை பிரதான வீதிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள இந்தக் கிராமத்திற்கு கிரான் பாலத்தினூடாகவும் செல்லலாம் ஆனால் இவ்வாறு செல்வதானால் 15 கி.மீ தூரத்திற்கு மேல் பிரயாணம் செய்யவேண்டி இருக்கும் ஆகையால்தான் நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துவதற்காகத்தான் இந்தப் பாதுகாப்பற்ற “கிண்ணையடி துறையைக்” கடந்து முறுக்கன்தீவுக்கு மக்கள் நாளாந்தம் செல்கின்றனர். 

குறித்த இந்தக் கிண்ணையடித் துறையில் பாதை என்றழைக்கப்படும் படகோ அல்லது இயந்திர விசைப் படகோ சேவையில் இல்லை மாறாக சிறியவகை கண்ணாடி இளையிலான தோணியே உள்ளது.

மேற்குறித்த இரண்டு தோணிகளை பிணைத்து கைகளால் வலித்துக்கொண்டே துறையைக் கடக்கின்றனர் பொதுமக்கள். இவ்வாறு செல்வது ஒரு பாதுகாப்பான பிரயாணமாக அமையும் என சொல்ல முடியாது. சில நேரங்களில் காற்று அதிகமாக வீசினால் தோணியானது நீரில் மூழ்குவதற்கு சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

அடுத்ததாக இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவெனில் குறித்த தோணியை இயக்குவது அதாவது ஓட்டிச் செல்வது ஒரு வயதான பெண் என்பதுதான். இவர் ஒரு பிரயாணிக்கு ஒரு முறை ஆற்றைக் கடப்பதற்கு தலா 5.00 ரூபா மட்டும் அறவிடுகிறார்.

ஆனால் கஸ்ரப்பட்டு உழைக்கும் இந்தப் பணம் முழுவதும் இவருக்கே செல்கின்றதா என்றால் அதுதான் இல்லை இதற்குப் பின்னால் ஒரு சோகமான கதையே இருக்கின்றது.

குறித்த இந்தத் துறைக்குப் பொறுப்பாக கிண்ணையடியில் உள்ள ஒரு வினாயகர் ஆலயம் இருக்கின்றது குறித்த ஆலயத்தின் நிருவாக சபையானது தோணி ஓட்டுகின்ற மேற்படி பெண்மணியிடம் கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றது. அந்த உத்தரவுதான் “துறையில் நாளாந்தம் வரும் வருமானத்தில் ரூபா 300.00 ரூபாவை ஒவ்வொரு நாளும் தவறாமல் செலுத்தவேண்டும்” என்பதுதான்.

ஆனால் சில நாட்களில் 300.00 ரூபாவை விட குறைவான வருமானம்தான் அந்தப் பெண்மணிக்கு கிடைக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த 300.00 ரூபாவை ஆலயத்திற்கு செலுத்துவதற்கு குறித்த பெண் மற்றவர்களிடம் கடன் வாங்கியே கொடுப்பதாகக் கூறுகின்றார்.
குறித்த இந்த ஆலய பரிபாலன சபை ஏன் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றது என குறித்த துறையினால் பிரயாணம் செய்கின்ற பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.

குறித்த ஆலயத்தில் புணருத்தாரண பணிகள் நடைபெறுவதாலும் அத்துடன் அந்த ஆலயத்தின் பூசகருக்கு மாதாந்த வேதனம் வளங்குவதற்காகவுமே குறித்த துறையில் கண்டிப்பான வரி அறவீட்டை ஆலயம் மேற்கொள்வதாகவும் பதில் அளித்த பொதுமக்கள் இன்னுமொரு ஆச்சரியமான பதிலையும் கூறினார்கள்.

குறித்த துறைக்கு இயந்திரப் படகுச் சேவையையோ அல்லது ஒரு பாலத்தையோ கட்டுவதற்கு குறித்த ஆலய பரிபாலன சபைதான் தடையாக இருப்பதாகவும் ஏனெனில் இயந்திரப் படகுச் சேவை ஏற்படுத்தினால் அதன் பொறுப்பு வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் இதனால் ஆலயத்திற்கு வருமானம் இல்லாமல் போய் விடும் மாறாக பாலம் அமைத்தாலும் ஆலயத்திற்கு வருமானம் கிடைக்காது இதனால்தான் குறித்த ஆலய பரிபாலன சபை இவற்றுக்கு தடையாக உள்ளதாகவும் இதனால் பொது மக்களாகிய தாங்கள் நாளாந்தம் பெரிதும் கஸ்ரப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இனி முறுக்கன்தீவு கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் மற்றும் அங்குள்ள மட். முறுக்கன்தீவு சிவசக்தி வித்தியாலய பாடசாலை சமூகம் குறித்த துறையினூடான போக்குவரத்துப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதனையும் கேட்டறிந்தோம்.

முதலில் குறித்த பாடசாலையின் அதிபரிடம் (ஒரு பெண் அதிபர்) துறையினூடான போக்குவரத்துப் பற்றிக் கேட்டபோது அவர் சொன்ன பதிலும் பொதுமக்கள் சொன்ன பதிலும் ஒன்றாகவேதான் இருந்தது அதாவது துறையைக் கடக்கும் மார்க்கத்தை மாற்றியமைத்தால் கோயிலின் வளர்ச்சி பாதிக்கப்படும் என கூறிய அதிபரிடம் பாடசாலை மாணவர்களின் கல்வியை விடவும் ஆலயத்தின் வளர்ச்சியைப் பெரிதாகக் கூறுகிறீர்களே!  ஏனக் கேட்டபோது சற்றுச் சிந்தித்த அதிபர் ஆலயத்தின் வளர்ச்சிக்காக மாணவர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுவது சரியெல்லதான் என ஒப்புக்கொண்டார்.

அடுத்ததாக கிராம மக்களிடம் குறித்த துறைப் போக்குவரத்துப் பற்றிக் கேட்டபோது. தாங்கள் இந்தத் துறையைக் கடந்து செல்வதற்கு நாளாந்தம் பெரிதும் கஸ்ரப்படுவதாகவும் இதற்கெல்லாம் காரணம் கிண்ணையடி ஆலய பரிபாலன சபையே எனவும் தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தினார்கள்.

எது எவ்வாறாயினும் தற்கால நவீன யுகத்தில் ஆயலத்தின் வளர்ச்சிக்காக பொதுமக்கள் மாணவர்கள் பலிக்கடாவாவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல இதை குறித்த ஆலய பரிபாலன சபையும் அக்கிராம மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். 

அத்துடன் குறித்த துறையினூடான போக்குவரத்து பாதுகாப்பானதாக உள்ளதா என்பதனை குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளரும் பிரதேச சபையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் இந்த விடயத்தை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சு மட்டத்தில் கொண்டு சென்று பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டும். என்பதனையே பலரும் எதிர் பார்க்கின்றனர்.










SHARE

Author: verified_user

0 Comments: