20 Feb 2014

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த மாபெரும் திரை மேதை

SHARE
  (கங்கா)  

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த மாபெரும் திரை மேதையின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் துக்கமும் கௌவுகின்றன. மட்டக்களப்பின் சிற்றூரான அமிர்தகழியில் பிறந்து உலகம் தழுவிய அளவில் தன் புகழை தன் சினிமா மூலம் வெளிப்படுத்திய ஒப்பற்ற ஒரு கலைஞனின் இழப்பு ஈடு இணையற்றதாகும்.

என மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளரும்  “மறுகா”  எனும் சஞ்சிகையின் ஆசிரியருமான த.மலர்ச்செலர்வன் பாலு மகேந்திரா அவர்களின் மறைவினை முன்னிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதல் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
தமிழ் சினிமா வியாபாரச் சினிமாவாக மலினப்பட்டு யதார்த்தத்திற்கப்பாற்பட்ட சினிமாவை உற்பத்தி செய்து கொண்டிருந்த சூழலில் தமிழில் மாற்றுச் சினிமாவை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தப் பாடுபட்ட ஓர் உன்னதக் கலைஞனை இன்று மட்டக்களப்பு இழந்திருக்கின்றது.

கன்னடச் சினிமா மூலம் நெறியாளராக பரிணமித்த பாலுமகேந்திரா தனது “தலைமுறைகள்” படம்வரை தமிழிலும் ஏனைய மொழிப் படங்களிலும் வித்தியாசமான படங்களைத் தடம் பதித்துள்ளார்.

அதுபோல் பிற நெறியாளர்களுக்காக ஒளிப்பதிவு செய்த படங்களும் பாலமகேந்திராவினால் வெற்றியடைந்திருக்கின்றன. பாலுமகேந்திராவின் “கதைநேரம்” நாடகத் தொடர்கள் கூட சின்னத்திரையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கதவுகளைத் திறந்தன.

இவ்வாறான ஒப்பற்ற கலைஞனின் மறைவு பலரை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்ற சூழலில் சில புல்லுருவிகள் அவரைத் தூற்றுகின்ற கைங்கரியங்களைச் செய்யும் அபத்த சூழலில் வாழ்வதை நினைத்து வெட்கப்படுகின்றேன். இது துக்கமானதும் அர்ப்பத்தனமான செயலுமாகும்.
இச்சூழலில் மட்டக்களப்பு சமூகம் பாலமகேந்திராவை நீள நினைத்தல் வேண்டும். ஒரு ஒப்பற்ற கலைஞனின் ஈடு செய்ய முடியாத துயரத்தில் “மறுகா” - புதிய தலைமுறைக்கான உடைப்பு அன்னாரின் குடும்பத்தின் துயரத்துடன் பகிர்வதை விட வேறென்ன செய்ய முடியும். என அதில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: