29 Jan 2014

கிழக்கு மாகாண சபையின் முன்னால் கவனஈர்ப்பு போராட்டம்

SHARE

கிழக்கு மாகாண சபை அமர்வினை எதுவித காரணங்களுமின்றி ஒத்திவைத்த சபை தவிசாளரின் நடவடிக்கையினை கண்டித்து மாகாண எதிர்க்கட்சிகளினால் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் தரம் இரண்டிக்கான நியமனங்களை வழங்கும் வகையில் போட்டிப்பரிட்சைகள் நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

170 பேர் இந்த நியமனத்தில் இணைக்கப்படவுள்ளனர். ஆனால் இவற்றில் 115 பேர் முஸ்லிம்களாகவும் 40 பேர் சிங்களவர்களாகவும் உள்ள நிலையில் 15பேர் மட்டுமே தமிழர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்

இவற்றில் தமிழர்களுக்கான நியமனங்கள் புறந்தளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இன்று அவசர பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் கட்சி தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானத்தின் படியே பிரேரணை கொண்டுவரலாம் எனவும் பிரேரணைகள் 10 தினங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவசர பிரேரணைகளை உடனடியாக கொண்டுவர வேண்டிய தேவைப்பாடு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு என தமிழ் தேசிய கூட்டமைபு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய மாகாண சபை அமர்வுகளை கூட்டிய பின்னர் ஒத்திவைத்து கட்சி தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவோம் என தவிசாளரினால் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரேரணைக்கு எதிர்த்து பின் வரிசையில் இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையினை விட்டு வெளியேறினர்.

தேனீர் இடைவெளிக்கு சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடுவதற்கான மணி ஒலிக்கப்பட்டபோது சபை அமர்வுகளுக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வருகைதந்தனர். அந்தவேளையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் கூட்டமும் நடந்துள்ளது. 

அந்த கூட்டத்தின் இறுதியில் சபைக்கு வருகை தந்த தவிசாளர் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் சபையின் கூட்டத்தினை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும் திகதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்து சபையினை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து சபைக்கு முன்பாக எதிர்கட்சிகளினால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்" என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: